Skip to main content

20 தொகுதிகளில் பணத்தை நம்பித்தான் திமுக போட்டியிடுகிறது : டிடிவி தினகரன்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

 

அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி தொகுதியில் பிரச்சாரம் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 

வருமான வரித்துறை அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின்படி சோதனை செய்தால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களை மட்டும் குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் இருக்கிறது.

 

T. T. V. Dhinakaran



தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சி பணம் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
 

குறிப்பாக சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது தேர்தல் நடந்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் வேட்பாளர் வீட்டில் இவர்களே பணத்தை வைத்து பிடிக்க வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக தகவல்கள் வருகிறது.
 

துரைமுருகன் வீடு, குடோன், அவரது உதவியாளர் வீடு ஆகிய இடங்களில் இருந்துதான் பணம் எடுத்ததாக சொல்கிறார்கள். இந்த இடங்கள் எல்லாம் துரைமுருகனுக்கு சம்பந்தப்பட்ட இடங்கள் தானே. எல்லா இடத்திலும் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள்.
 

பணம் பிடிபட்ட பிறகு எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்கள். நீலகிரி தொகுதியில் கூட பண மூட்டை ஒருவர் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 

20 தொகுதிகளில் பணத்தை நம்பித்தான் தி.மு.க. போட்டியிடுகிறது. ஓட்டுக்கு ரூ.500-1000 கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை தாண்டி பணம் கொடுக்க ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
 

வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதனால் இந்த வருமான வரிச் சோதனையை தேர்தலை நிறுத்துவதற்கான சதியாக நான் பார்க்கவில்லை. துரை முருகனுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில்தான் பணம் பிடிபட்டிருக்கிறது.
 

அரசை காப்பாற்றிக் கொள்ள உளவுத்துறை முதற்கொண்டு அவர்கள் கையில் இருப்பதால் மற்ற வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இவர்களே பணத்தை வைத்து எடுக்க வைத்து தேர்தலை நிறுத்த முயற்சி செய்வார்கள். குறிப்பாக எங்கள் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை வைத்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சொல்லி வருமான வரித் துறையை அனுப்பி பணத்தை எடுக்கலாம்.
 

அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்ய மத்திய- மாநில ஆட்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்