தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் மழையையே சமாளிக்க முடியாமல் திமுக அரசு தடுமாறி வருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழக் கிழமை அன்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதுபோல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது.
நான் பலமுறை சுட்டிக்காட்டி பிறகும் இந்த திமுக அரசின் உணவுத்துறை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைச் சரியானபடி பாதுகாப்பாக குடோன்களில் வைக்காததாலும், தார்ப்பாய்கள் கொண்டு மூடாததாலும் தற்போது பெய்த இரண்டு மூன்று நாட்கள் மழையிலேயே சுமார் 5,000 நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு முளை விட்டிருந்தது பெரும்பாலான ஊடகங்களில், நாளிதழ்களில், சமூக வலைத்தளங்களில் செய்திகளாக வெளிவந்தன. ஏற்கனவே இந்திய உணவு கழகம் தமிழ்நாடு சிவில் சப்ளை நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அவை அரவை ஆலைகளில் அரிசிகளாக மாற்றப்படும் பொழுது கரும்பு, பழுப்பு நிறமாகவும், தரம் குறைந்தும் கால்நடைகள் கூட உண்ணுவதற்கு லாயக்கற்றதாக உள்ளது என்று சான்று அளித்துள்ளனர்.
நான் இந்த திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகள் சுட்டிக் காட்டும் போதெல்லாம் இந்த அரசின் அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டி பதில் சொல்வதை விட்டுவிட்டுப் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணம் அளிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.