Skip to main content

“மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 12/10/2024 | Edited on 12/10/2024
EPS Emphasis on Ensure adequate security to the people

சென்னை கதீட்ரல் சாலையில், செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி  (07.10.2024) திறந்து வைத்தார். இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் போன்றவை சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ளப் பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டுப் பறவைகளைப் பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திடப் பெரியவர்களுக்கு ரூ.150 சிறியவர்களுக்கு ரூ.75 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரத்தில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தைக் காணப் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளைப் பார்வையிடப் பெரியவர்களுக்கு ரூ.50,  சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்படக் கருவிகளுக்கு (camera) ரூ.100 எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

EPS Emphasis on Ensure adequate security to the people

இத்தகைய சூழலில் தான் 500 மீட்டர் கொண்ட ஜிப்லைனில் இன்று (12.10.2024) தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது அதில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சிக்கிக் கொண்டனர். இதனால் அப்பெண்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதனைக் கவனித்த பூங்கா ஊழியர்கள் இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘கலைஞர்’ பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாகக் கீழிறக்கப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன.

அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த பூங்காவிற்கு வசூலிக்கிறது திமுக அரசு. எனவே பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரியப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்