மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவுடையும் நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சி, இந்த தேர்தலில் அதே கூட்டணியோடு போட்டியிடவுள்ளது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது.
கூட்டணி கட்சிக்குள் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வராத நிலையில், பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் அணி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, தங்களுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. அதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியது. அதன் பிறகு, தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார் என்ற பெயருடன் சரத் பவார் அணி செயல்படத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை அஜித் பவார், எங்களது வழிகாட்டுதல்களை மீற மாட்டேன் என்ற உறுதிமொழியை நவம்பர் 4ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். உங்களுக்கே சங்கடம் தரும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். எங்கள் உத்தரவை வேண்டுமென்றே மீறும் முயற்சி நடப்பதாகக் கண்டால், நாங்கள் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை தொடங்குவோம்’ என்று எச்சரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை மறுப்பு குறியுடன் (Disclaimer) பயன்படுத்த அஜித் பவார் அணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.