கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இதையடுத்து நேற்று முன் தினம் தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மூன்றாவது நாளான இன்றும் தொடர்ந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பிடமும் சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்ப, இருதரப்பும் தங்கள் வாதத்தை முன் வைத்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில், ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலி கொடுக்கப்படுகிறது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குதான் உள்ளது. இன்றைக்கு தேர்தல் நடந்தால் கூட நானே வெற்றி பெறுவேன்.
மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறேன்; கட்சியின் இக்கட்டான சூழலில் முன் நின்று போராடியிருக்கிறேன்; அப்படிப்பட்ட என்னை சில அற்ப காரணங்களுக்காக வெளியேற்றி இருக்கிறார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பின் வாதம் அனைத்தும் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியின் வாதமும் இன்றே நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.