
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்த்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரம் இன்றி தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை அண்ணாமலை கூறியதாக அந்த மனுவில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் திமுக தொடர்ந்துள்ள வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, ''என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்பிற்குரியது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது. மூன்று முறை பால் விலையை ஏற்றிய நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது. ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுகவின் இரண்டாவது சொத்துப்பட்டியல் வெளியிடப்படும். இரண்டாவது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியாகும். அரசு வழக்கறிஞர் மூலமும் என் மீது வழக்கு போடுங்கள். எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.