Skip to main content

தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்; பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் கொண்டாடுகிறதா?

Published on 24/04/2025 | Edited on 24/04/2025

 

Cake taken into the Pakistani embassy at Pahalgam attack incident

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது இந்திய ராணுவப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. 

இதனால், டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அலுவகத்திற்கு போடப்பட்டிருந்த பாரிகேட் உள்பட அனைத்து பாதுகாப்பையும் டெல்லி போலீசார் இன்று (24-04-25) காலை நீக்கியது. இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தூதர்களுக்கு இந்தியா தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே இன்று, பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்குள் கேக் போன்று ஒன்றை ஒருவர் ஏந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரைச் சுற்றி கேக்கை கொண்டாட்டத்திற்காக எடுத்துச் செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அந்த நபர் எந்த பதிலும் அளிக்காமல் அலுவலகத்திற்குள் நுழைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்