அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதனிடையே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோமா, வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும் உள்ளிட்ட விசயங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதேபோல் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்தது. இதில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய கே.சி.வீரமணி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது நமது கட்சிக்கு எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். எவ்வித சண்டை சச்சரவுகளுக்கும் இடமின்றி கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும். பொருளாதாரத்தில் வேட்பாளர்கள் உயர்ந்தவராக இருக்கவேண்டும். குறிப்பாக அவர் அந்த பகுதியில் நன்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் நிறுத்தப்படும் எந்த வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவரை எதிர்த்து நமது கட்சிக்குள்ளேயே தனியாக களம் இறங்கக்கூடாது. எம்பி தேர்தல் தோல்விக்கு பாஜகவின் மீது இருந்த அதிருப்தியே காரணம். இதனால் நமது வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்றார்.
பொருளாதாரத்தில் வேட்பாளர்கள் உயர்ந்தவராக இருக்கவேண்டும் என்று அமைச்சர் பேசியதால், கட்சி நிர்வாகிகள் பலர் அமைச்சர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஏற்கனவே திமுக தனது பணியை தொடங்கிவிட்டது. அமமுகவும் தனது வேலையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அமைச்சர் இப்படி பேசினால் எப்படி? இவரை எப்படி நம்புவது. பணம் உள்ளவர்களுக்குத்தான் வேட்பாளர் சீட் என்கிறார். பணம் இருந்தால் நாங்கள் ஏன் கவுன்சிலர் சீட்டுக்கு நிற்கிறோம், எம்எல்ஏ எம்பி சீட்டுக்கு போட்டிப்போடுவோமே? நாங்கள் என்ன எம்எல்ஏ, எம்பி சீட்டுக்கா நிற்கிறோம். விரமணி பேசியது தொடர்பா இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு புகார் கடிதம் எழுதுவோம். நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம். வேட்பாளர் பட்டியல் வெளியாகட்டும், அதுவரை அமைதி காப்போம். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் வரவில்லை என்றால் அதன்பிறகு தங்களது முடிவு வேறு மாதிரி இருக்கும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் கூறினர்.