மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர அழைப்பின் பேரில் மீண்டும் டெல்லிக்கு விரைகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது சில வாக்கியங்களை இணைத்தும், தவிர்த்தும் ஆளுநர் பேசிய விவகாரம் சர்ச்சையானது. ஆளுநரின் செயல்களுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஆளுநரைக் கோபப்பட வைத்த நிலையில் அவர் சபையிலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார்.
இதனையடுத்து ஆளுநரை ஒருமையில் விமர்சித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக பேசினார். அவரது அராஜக பேச்சும், தொடர்ந்து திமுகவினரின் அநாகரீக போக்கும் அறிந்து மிகவும் கோபமானார் ஆளுநர் ரவி. உடனே ஆளுநரின் உத்தரவின் பேரில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸ் கமிஷ்னரிடம் புகார் கொடுத்தார் ஆளுநரின் செக்ரட்டரி பிரசன்ன ராமசாமி. கவர்னர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவார் என ராஜ்பவன் எதிர்பார்த்தது. ஆனால், எஃப்.ஐ.ஆர். கூட போடப்படவில்லை.
ஆளுநர் டெல்லி சென்று திரும்பிய நிலையிலும், அவர் கொடுத்த புகாரை கிடப்பில் போட்டுவிட்டது போலீஸ் கமிஷனர் அலுவலகம். இதனால் தமிழ்நாடு அரசு மீதும், காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் கோபமடைந்துள்ளார் கவர்னர். இந்த நிலையில், திமுக முன்னாள் எம்.பி.யும் சீனியர்களில் ஒருவருமான ஆர்.எஸ்.பாரதியும் ஆளுநரை ஒருமையில் விமர்சித்தார். இதுவும் சர்ச்சைகளை உருவாக்கியது. திமுகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலினினும் ஆளுநரை ஒருமையில் பேசினார். இவைகள் அனைத்தும் மத்திய உளவுத்துறையினர் சேகரித்து பிரதமர் அலுவலகத்துக்கும், ஆளுநருக்கும் ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசித்தபடி இருந்தார். இந்த நிலையில் தான், ஆளுநரைத் தொடர்பு கொண்டு டெல்லிக்கு வருமாறு மீண்டும் அழைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையடுத்து நாளைக்கு அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த 12-ந்தேதி டெல்லிக்கு சென்று விட்டு மறுநாள் சென்னை திரும்பிய ஆளுநரை மீண்டும் டெல்லி அழைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பவன் கொடுத்தபுகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் திமுக அரசு மீது ஆளுநரின் கோபம் அதிகரித்துள்ளது என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.