“அண்ணா கொடி ஏந்திய தொண்டர்கள் ரோட்டில் நின்று அடித்துக் கொள்ள தூண்டிவிடுகிறார் என சொன்னால் இவர் அரசியல் கட்சித் தலைவரா?” என எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என கிட்டத்தட்ட 11 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் சென்று ஓபிஎஸ் தரப்பினரை கொடியை கட்ட விடாதீர்கள் என்றும் காவல்துறையினருக்கு தவறான தகவல்களைக் கொடுப்பது போன்ற வேலைகளை இபிஎஸ் செய்கிறார். பழனிசாமியும் நானும் மோதிக் கொள்ளலாம். பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மோதிக்கலாம். வழக்கு மன்றங்களில் கூட மோதிக் கொள்ளலாம். ஆனால் தொண்டனும் தொண்டனும் அடித்துக்கொள்ள வேண்டுமா? ரோட்டில் நின்று அண்ணா கொடி ஏந்திய தொண்டர்கள் அடித்துக்கொள்ள தூண்டிவிடுகிறார் என சொன்னால் இவர் அரசியல் கட்சித் தலைவரா?
பொதுக் கூட்டங்களுக்கு போகும் வழிகளில் எடப்பாடியில் ஆட்களை ரெடி செய்து கலாட்டா செய்ய ரெடியாக இருக்காராம். கேள்விப்பட்டோம். வந்தா கட்டிப் பாருங்கன்னு சொல்றாங்கனு சொல்லி மாவட்ட செயலாளர் ஃபோன் செய்கிறார். தொண்டர்கள் தொண்டர்கள் அடித்துக்கொள்ள வேண்டும் என்று கனவில் கூட நினைக்காதீர்கள். அது நடக்காது” எனக் கூறினார்.