2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாவது, ‘இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அலுவல் இன்று (08-01-25) தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை பொதிகை (டிடி தமிழ்) நேரலை செய்ய அனுமதிக்காதது ஏன் என விளக்கம் அளித்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, “ஆளுநர் உரையின் போது டிடி பொதிகை டிவி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது. வெட்டி, ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டுபிடித்ததால் பொதிகைக்கு நேரலை தரப்படவில்லை. 3 நிமிடம் தான் ஆளுநர் அவையில் இருந்தார். அதன் பின் ஆளுநர் வெளியேறிவிட்டார்.
பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. பொதிகை மூலம் நினைத்ததை நடத்த முடியவில்லை என்பதால் ஆளுநர் பதிவிட்டிருக்கிறார். ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாடம் வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமையில்லை. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர கோரிக்கை வைக்க முடியாது. அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை” என்று கூறினார்.