2025 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அலுவல் இன்று (08-01-25) தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் ஒவ்வொருவரும் பேசி வந்தனர். இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக விவகார்த்தில் ஆளுநருக்கு எதிராக அதிமுக முழக்கமிட்டதாக சபாநாயகர் அப்பாவு பேசினார். அரசுக்கு எதிராகவே முழுக்கமிட்டதாகவும், ஆளுநர் என சபாநாயகர் மாற்றிக் கூறியதாகவும் அதிமுக புகார் தெரிவித்து அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் உரையின் போது பதாகைகளை கொண்டு வந்து போராடிய அதிமுகவினர் மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?. ஆளுநருக்கு எதிராக அதிமுக முழக்கமிட்டதாக சபாநாயகர் பேசியதை வாபஸ் பெறக் கூடாது. சபாநாயகர் பேசியதை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறக் கூடாது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை. எழுதிக் கொடுப்பதை வாசிக்க வேண்டுமே தவிர கோரிக்கை வைக்கக் கூடாது. ஆளுநர் உரையன்று உரிமை மீறலில் ஈடுபட்டோர் மீது உரிய விசாரணை நடத்தப்படும். ஆளுநர் உரையன்று நடந்தவற்றை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்சனையை அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்” என்று பேசினார். இதையடுத்து பேசிய முதல்வர், “உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பும் முடிவில் குறுக்கிட விரும்பவில்லை. எதிர்காலத்தில் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று கூறினால் முற்றுப்புள்ளி வைக்கலாம். எனவே, அதிமுகவினர் மீதான நடவடிக்கை தேவையில்லை” என்று கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து, அதிமுக மீதான உரிமை மீறல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.