பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார். அவர் வெளியே வந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்துவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே உள்ள குரும்பப்பட்டியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.18) மாலையில் நடந்தது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பலர், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும், பொதுக்கழிப்பறை, சுகாதார வசதிகள் இல்லை என்றும் கூறினர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுவந்த சுழல்நிதி நிறுத்தப்பட்டதால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களின் துயர் துடைக்க தி.மு.க. வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், “இங்கே பேசிய பெண்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றில் பல பணிகள், உள்ளாட்சித்துறை மூலமாக நிறைவேற்றப்பட வேண்டியவை. ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஊழல்மணியாக திகழ்ந்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் சமையல் காஸ் சிலிண்டர், பருப்பு, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருந்தன. இப்போது அவை கடுமையாக விலை உயர்ந்துள்ளன.
இதுபோன்ற விஷயங்களை சுட்டிக்காட்டினால், இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இதனால் அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். இவர் எப்படி முதல்வர் ஆனார்? என்பது அனைவருக்கும் தெரியும். துரோகம் என்பதற்கு இவர்தான் உதாரணம். வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்து விடும். சசிகலாவால் முதல்வரான இவர், அவருக்கே துரோகம் செய்தார்.
ஜெயலலிதா ஆட்சி என்று பேசிக்கொள்ளும் இவர்கள், அவரின் மரணம் குறித்து இதுவரை எந்த உண்மையையும் வெளியே கொண்டுவரவில்லை. சாதாரண மனிதருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் என்ன வியாதி, எப்படி இறந்தார் என்று கேட்பது இயல்பு. ஆனால், முதல்வரான ஜெயலலிதாவின் இறப்பு குறித்து இதுவரை உண்மை தெரியவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்து, நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து கமிஷன் அமைத்தனர். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இதற்கு விடை தரவில்லை. இதைப்பற்றி எல்லாம் முதல்வருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவரின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பதுதான்.
கரோனா காலத்தில்கூட கொள்ளையடித்த கும்பல் இந்தக் கும்பல். முகக்கவசம், விளக்கமாறில் கூட கொள்ளையடித்த கும்பல். இந்தக் கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். அந்த முடிவில்தான் நீங்கள் அனைவரும் வந்து இருக்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து சேலம் வருகை தந்த அவருக்கு, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.