சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தனது தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவிலிருந்து கிளம்பினார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், 10.30 மணி அளவில் தமிழக எல்லையை வந்தடைந்தார்.
தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால், சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக கர்நாடக எல்லையில், காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கிருஷ்ணகிரி பகுதியில் சசிகலா, அதிமுக நிர்வாகி ஒருவரின் காரில் மாறி, அந்த காரில் சென்னை நோக்கிவந்தார். இவருக்கு ஆங்காங்கே அமமுகவினர் வரவேற்பு அளித்துவருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் ஏற்தாழ 5,000 பேர் சசிகலாவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக தயாராகியிருக்கிறார்கள்.
முன்னதாக, சிறையிலிருந்து சசிகலா தமிழகம் வந்ததும், ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டம் வைத்திருந்தார். திடீரென தமிழக அரசு, பல்வேறு பணிகள் இருப்பதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில், சென்னை வரும் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ரகசியத் திட்டம் வைத்திருப்பதாகத் தகவல் பரவியுள்ளது. அதுகுறித்து விசாரித்தபோது, சென்னை வரும் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தனியாக ஒரு ஹெலிகாப்டர் தயார் செய்திருப்பதாகவும் அதில் பயணம் செய்து வானத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்தின் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.