திருப்பூர் அருகே குன்னத்தூரில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய தினகரன்,
தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வோம். ஒரே சின்னத்தை பெற்று பதிவு பெற்ற கட்சியாக போட்டியிடுவதற்காகவே இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை.
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் வரும்போது நெல்லிக்காய் போல் சிதறி விடுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆக்கி விடுவோம் என்று தற்போது தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். சிறைக்கு சென்று 3 வருடங்கள் ஆகியும் யாராவது அவரை சந்திக்க சென்றீர்களா?. அவருடைய கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இருந்தபோது பரோலில் வர எதிர்ப்பு தெரிவித்தீர்கள். நடராஜன் மறைவுக்கு யாராவது வந்து அஞ்சலி செலுத்தினார்களா?.
இப்போது சசிகலா சிறையில் இருப்பதால் மக்களை குழப்புவதற்காக, அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வதாக, அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசுகிறார்கள். துரோகம் செய்தவர்களுடன் அவர் எப்படி சேருவார். அமைச்சர் தங்கமணி, தினகரன் எங்களோடு சேர வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறார். உங்களோடு நாங்கள் சேர வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதால் தான் ஆட்சி, அதிகாரம், வருமானம், பலன் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினோம்.
இந்த இயக்கம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்பது உறுதி. துரோகத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம். தாய் உறவு, குட்டி பகை என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு பேசினார்.