‘அ.தி.மு.க. தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை..நாங்கள் சசிகலா ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறோம்’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக, விருதுநகரிலும், செந்நெல்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் நால்வர், ‘தொண்டர்களைக் காக்க வரும் தியாகத் தலைவியே! வருக தாயே!’ என்று, தங்களது முகவரியோடு, அ.தி.மு.க. அடையாள அட்டைகளையும் போஸ்டரில் அச்சிட்டு ஒட்டியிருந்தனர். ‘அடிமட்டத் தொண்டராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக உருவாக்கியவரே சசிகலாதான்!’ என்று, அக்கட்சியின் தலைமைக்கும், போஸ்டரில் ‘செக்’ வைத்தனர்.
இதுகுறித்து, விருதுநகர் அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் “விருதுநகரில் நான்கு பேர் முகத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்திவிட்டால், தமிழகத்தில் சசிகலாவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு இருப்பதாக அர்த்தம் ஆகிவிடுமா? இதெல்லாம் லோக்கல் பாலிடிக்ஸ். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவி தனக்கு கிடைக்காததால், ஒரு அணி சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான, ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதிக்கு குடைச்சல் தந்தபடியே இருக்கிறார், ஒன்றிய கவுன்சிலரான செந்நெல்குடி மாரியப்பன். சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டியது அவருடைய மகன் செல்லப்பாண்டியும், அவருடைய ரத்த சொந்தங்களும்தான். இதையெல்லாம் பார்க்கும்போது, 1991- 96-ல் சசிகலாவும், அவரது பெயரைச் சொல்லி அந்தக் குடும்பத்தினரும் போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது” என்றார்.
மேலும், அந்த நிர்வாகி வெளிப்படுத்திய ஆதங்கம் இதோ -
“தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஆறு டெல்டா மாவட்டங்களிலும், ஒன்பது தென்மாவட்டங்களில், கன்னியாகுமரி நீங்கலாக, தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் அனைத்திலும் தற்போது சசிகலா அலை வீசுவதாகவும், பொய்யான ஒரு பிம்பத்தை, திட்டமிட்டே உருவாக்கி வருகின்றனர்.
சசிகலாவுக்கு அப்படி எந்தவொரு செல்வாக்கும் இல்லை என்பதற்கு, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சான்றாக உள்ளன. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே, அ.தி.மு.க. கோட்டை என்று சொல்லப்படும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில், 53 தொகுதிகளில்தான் அ.தி.மு.க.வால் வெற்றிபெற முடிந்தது. அதன்படி பார்த்தால், கடந்த 2016 தேர்தலிலேயே, சசிகலா சார்ந்துள்ள முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் பெரிய அளவில் இல்லாத தொகுதிகளாக, 181 தொகுதிகள் தமிழகத்தில் உள்ளன. ஒரு கணக்குக்காக, தமிழகத்தில் உள்ள சசிகலா (முக்குலத்தோர்) ஆதரவு தொகுதிகள் வெறும் 53 மட்டும்தான் என்று வைத்துக்கொண்டாலும், இந்த வாக்கு வங்கியில் ‘எம்.ஜி.ஆர்.+ ஜெயலலிதா+ அ.தி.மு.க.+ இரட்டை இலை’ என சகலமும் பின்னிப் பிணைந்துள்ளன. எப்படி பார்த்தாலும், தற்போது அ.ம.மு.க. வாக்கு வங்கி மிக மிகத் தேய்ந்துபோனாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த 5 சதவீத வாக்குகளை, சசிகலா ஆதரவு வாக்குகள் என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
சாதி அடிப்படையில் உள்ள இந்த 5 சதவீத வாக்குகளுக்காக, ஒருவேளை சமரசம் ஏற்பட்டு, சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டால், கட்சியை வைத்து துளியும் சம்பாதிக்காத, சாதி அடையாளத்தை துளியும் விரும்பாத 40 சதவீத அ.தி.மு.க. அனுதாபிகளின் வாக்குகளை, வரும் தேர்தலில் இழக்க நேரிடும்.
1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வி அடைந்ததற்கும், ஒற்றை இலக்கத்தில், வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும், வலுவான காரணங்கள் உண்டு. சசிகலா குடும்பத்தினர் மீது தீவிரப் பாசம் காட்டியதும், சசிகலா அக்கா மகன் சுதாகரனுக்கு ஆடம்பர திருமணம் நடத்தி வைத்ததும், மன்னார்குடி வகையறாக்களில் அடாவடி அத்துமீறல்களும்,தமிழக மக்களை எரிச்சலடைய வைத்தன. ஆனாலும், இதே விருதுநகர் மாவட்டத்தில், 1996- ல் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தாமரைக்கனி போன்ற கட்சி விசுவாசிகள் வெற்றி பெறாமல் இல்லை. 1991-ல், அ.தி.மு.க. தலைமையால் சீட் மறுக்கப்பட்டு, தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூரில் சுயேச்சையாகப் போட்டியிட்ட நிலையிலும், அவரால் வெற்றி பெற முடிந்தது. ஆக, அ.தி.மு.க. அனுதாபிகளும், தமிழக வாக்காளர்களும், எப்போதும் தெளிவாகத்தான் இருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர். இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களின் பெருவாரியான ஆதரவு அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது. சசிகலா குடும்பத்தினர் தலையெடுத்த பிறகே, ‘தேவர் கட்சி’ என்ற இமேஜ் ஏற்பட்டு, அந்த மக்களின் வாக்கு வங்கி எங்கெங்கோ சிதறிப்போனது. எம்.ஜி.ஆர். காலத்தில், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். பிறகு, முக்குலத்தோரான கே.கே.சிவசாமி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களெல்லாம், இங்கே மாவட்டச் செயலாளர் ஆனதற்கு, கட்சியை சசிகலா பின்னால் இருந்து இயக்கியதே காரணம். தற்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ‘ஓ.பன்னீர்செல்வம் பின்னுக்குத் தள்ளப்பட்டதும்கூட, ஒருவகையில் சரிதான்.. அ.தி.மு.க.வில் மீண்டும் முக்குலத்தோர் தலையெடுத்து விடக்கூடாது..’ என்பது, எங்கள் கட்சியில் உள்ள, பிற சமுதாயத்தவர்களின் அச்சமாக, இப்போதும் இருக்கிறது. அதேநேரத்தில், சசிகலா முகத்தைக் காட்டி, மிரட்டல் அரசியல் பண்ணுவதெல்லாம், எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் எடுபடாது.
சசிகலாவை ஒதுக்கிவைத்ததும், சசிகலா உட்பட, அவரது உறவினர்கள் அனைவரையும், போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றியதும், கட்சியை விட்டே விரட்டியதும், ஜெயலலிதா இருந்தபோதே நடந்தது. டிடிவி தினகரன், 2011-ல் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா இறக்கும் வரையிலும், அவரால் கட்சிக்குள் வரமுடியவில்லை. ஜெயலலிதாவால் அறவே வெறுக்கப்பட்ட தினகரன், சாதி பின்புலத்தோடு, தன்னையும் சசிகலாவையும் முன்னிறுத்தி வருகிறார். போஸ்டர்கள், பேனர்கள், தடபுடல் வரவேற்பெல்லாம் நடத்தி, ‘தமிழக அரசியலில் தனிப்பெரும் ஆளுமை என்றால் ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாதான்’ என்ற தோற்றத்தை உருவாக்கத் துடிக்கிறார்.
கோடிகளில் சொத்துகளைக் குவித்து, ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமாகி, சிறைத்தண்டனையை முடித்துவிட்டு, விடுதலையாகி வெளியில் வருபவரை, ‘தியாகத் தலைவி’ என்று, கொஞ்சம்கூட கூச்சப்படாமல் எப்படித்தான் சொல்ல முடிகிறதோ?” என்று சீறலாக வெடித்தார்.
ஒரு திரைப்படத்தில் வில்லன், ‘வேதநாயகம்னா பயம்’ என்ற வசனத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, காமெடியாகிவிடும். சசிகலா விஷயத்திலும், அது நடந்துவிடும்போல் தெரிகிறது.