அதிமுக சார்பில், கரூர் உழவர் சந்தை அருகே பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது செந்தில் பாலாஜி, ‘திமுக ஆட்சி அமைந்த உடன் 11.05 மணிக்கு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம்; தடுத்தால் அந்த அதிகாரி இருக்க மாட்டார்’ என்று பேசினார். ஆனால், தற்பொழுது புதுக்கோட்டையைச் சார்ந்தவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களை வைத்து மணல் அள்ளலாம் என்ற உரிமம் பெற்றுக்கொடுத்தோம்.
தற்போது திமுக ஆட்சியில், ஒரு சிறிய பொக்லைன் இயந்திரம், இரண்டு சிறிய டிப்பர் லாரி என மணல் அள்ளலாம் என்ன திருத்தப்பட்டது. கரூரில் இரண்டு இடங்களில் லாரிகளில் மணல் அள்ளுவதற்கும் இரண்டு இடங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மணல் அள்ளுகின்றனர். ஆனால் மூன்று மாதத்திற்குள் காவிரி ஆற்றில் மணலை சுரண்டிவிட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த பிறகு மணல் மாஃபியா கும்பல் ஒளிந்து கொண்டனர்.
கரூரில் மட்டும் ஒரு நாளைக்கு 2,000 லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஆனால், நாள் ஒன்றுக்கு பத்து லாரிகளில் மணல் அள்ளியதாக கணக்கு காட்டப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 வருடமாக ஆன்லைன் வழியாக அரசு மணல் விற்பனை செய்தது. ஆனால் திமுக அரசு இன்று 500 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு இதனை தனியாருக்கு விற்பனை செய்து விட்டது.
தமிழகம் முழுவதும் புதுக்கோட்டை மணல் மாஃபியாக்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். மூன்று மாதத்திற்குள் காவிரி ஆற்றில் மணல் அள்ளி முடித்துவிட்டனர். அடுத்ததாக காவிரி ஆற்றில் வேறு இடத்தில் மணல் அள்ளுவதற்காக ஏற்பாடு நடைபெற்று வருகிறது. முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் மக்கள் மனதில் பதிந்துள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் எடப்பாடி, யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என பேசினார்.