செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி. இவர், ஜெ.குரு நினைவு மணிமண்டப திறப்பு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
டாக்டர் ராமதாஸ் அவர்களின் மட்டமான அரசியல் நாடகம் காடுவெட்டி குருவின் நினைவு மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் அரங்கேறி இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த ராமதாஸ் கூட்டத்தில் பேசும்போது, வன்னிய இளைஞர்களுக்கு சூடேற்ற வேண்டும் என்னும் நோக்கிலும், குரு உடல் பாதிக்கப்பட்ட நேரத்தில் இவர்கள் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்று குருவின் சகோதரிகள் பேசியதை மறைக்க வேண்டும் என்னும் நோக்கிலும் ராமதாஸ் மட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
இவரையோ அல்லது குருவையோ கொலை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்கிற அவசியம் திமுகவிற்கு இல்லை.
இவர்களுக்கு சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே ஏதாவது ஒரு பழியை மற்றவர்கள் மீது போட்டு வன்னியர் இளைஞர்களை உணர்ச்சி வசப்பட வைத்து அதில் குளிர்காய்வதுதான் இவர்களின் கடந்த கால வரலாறு.
1981ல் ஆதிதிராவிடர் சமுதாயத் தலைவராக இருந்த இளையபெருமாளை வழிமறித்தார்கள் என கூறி அப்போது ஒரு கலவரம் வரும் அளவுக்கு செய்திகள் ஆனது. பிறகு ஒருவாரத்தில் ராமதாஸ் அவர்களின் காரில் கல்லைத்தூக்கிபோட்டு அவரை கொல்ல முயற்சி என்று ஒரு நாடகத்தை நடத்தி சாலையில் இருந்த மரங்களை வெட்டி போட்டு கலவரத்தை தூண்ட முயற்சி நடந்தது.
பிறகு வன்னியர் சங்கம் கட்டமைக்கும் காலகட்டத்தில் குருவை கொல்ல மாற்று சாதியினர் சிலர் திட்டமிட்டிருப்பதாக செய்தியை உருவாக்கி ஒரு பரபரப்பை ஏற்ப்படுத்துவார்கள். பிறகு காவல்துறையினர் கைது செய்து என்கவுன்டர் போட திட்டமிடுகிறார்கள் என செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்ப்படுத்துவார்கள். எப்போதெல்லாம் வன்னிய இளைஞர்கள் சோர்வாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் இதைப்போன்று பரபரப்பான வதந்தியை பரப்புவது டாக்டர் ராமதாசுக்கு கைவந்த கலை.
குரு பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் யாரை திட்டவேண்டும், என்ன என்ன பேச வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டு உசுப்பேற்றி, உசுப்பேற்றி பேசவைத்து அவரின் ஆயுளை முடித்தவர் ராமதாஸ்.
குருவுக்கு உடல் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாற்று நுரையீரல் பொருத்தி சிகிச்சை செய்ய சுமார் ரூ. ஒரு கோடி செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.
இந்த தகவலை இரண்டு மருத்துவரிடத்திலும் (ராமதாஸ், அன்புமணி) தெரியப்படுத்தியவுடன் குருவிடம் பணம் இல்லையா? என கேட்க அவரிடம் இல்லை என சொல்ல. எங்களிடமும் பணம் இல்லை வசூல் செய்து சிகிச்சை கொடுங்கள் என மருத்துவர்கள் சொல்ல, இந்த செய்தியை குருவிடம் தெரிவிக்க, குரு மருத்துவமனையில் இருந்து மனம் நொந்து வீட்டுக்கு வந்து யாரையும் சந்திக்காமல் 3 மாதங்கள் வீட்டின் அறையிலேயே இருந்தார்.
இந்த செய்தி தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு தெரிய, அவர் பத்திரிக்கையாளர்களை அழைத்து எனது நண்பர் குரு மருத்துவ சிகிச்சை இல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் என்னோடு வந்தால் வெளிநாட்டிற்க்கு அழைத்து சென்றாவது மருத்துவ சிகிச்சை கொடுக்க தயாராக இருக்கிறேன் என பேட்டி கொடுத்தார்.
உடனே ராமதாஸ் வெகுண்டெழுந்து காடுவெட்டி வந்து குருவை பார்த்து சமாதானப்படுத்தி மீண்டும் அப்பல்லோ கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
குரு கூட்டங்களில் பேசும்போது தொண்டர்கள் கை தட்டுகிறார்கள், ஆரவாரம் செய்கிறார்கள், அன்புமணி பேசும்போதும், ராமதாஸ் பேசும்போதும் எழுந்து சென்றுவிடுகிறார்கள் என்கிற ஆதங்கம் இருவருக்கும் உண்டு.
சாவு வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல் தமிழ் நாட்டுக்கு தான் முதல்வர் ஆக வேண்டும் என பேசும் அன்புமணியின் எண்ணம் எவ்வளவு கொடூரமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இவர்கள் தனித்து நின்று 120 சீட்டுகளை பிடிப்பார்களாம், ஆட்சி அமைப்பார்களாம், அருகில் 3 அதிமுக எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அன்புமணி பேசியிருக்கிறார். அது நடக்காது என்பதை புறிந்துகொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.