ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர், ''ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்தவுடனேயே இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சி தோல்வியடைந்து, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இரண்டு மாநிலங்களில் மாநில கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த 100 நாளில் வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என மோடி கூறினார். அதேபோல ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று அறிவித்தார். விலைவாசி குறைக்கப்படும் என்று சொன்னார். இந்த நான்கில் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை. இது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து சிறிதளவும் மனசாட்சி இல்லாமல் பொய் பேசக்கூடிய கட்சி பாஜக என்பது அம்பலமாகியிருக்கிறது.
அடுத்து திடீரென அறிவித்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும். ஊழல் ஒழிக்கப்படும், தீவிரவாதிகளுக்கு வரக்கூடிய உதவிகள் நிறுத்தப்படும் என்றெல்லாம் அறிவித்தார். இந்த அறிவிப்பால் சாதாரண மக்கள் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அச்சத்தோடு கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், சட்ட ரீதியாக வெள்ளைப்பணமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை.
ஒரே நாடு, ஒரே வரி என ஜிஎஸ்டியை அறிவித்தன் மூலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. வர்த்தகம் பாதிக்கப்பட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகளைப் பார்த்து மக்கள் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.
இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது. மோடி அலை ஓயாது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறாரே?
தனது கட்சி தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக தமிழிசை சௌந்தரராஜன் அப்படி கூறியுள்ளார். ஐந்து மாநிலங்களிலும் மோடியும், அமித்ஷாவும்தான் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டனர். இந்த தோல்வி பாஜகவுக்கும், பாஜக கொள்கைகளுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என்பதை தமிழிசை சௌந்தரராஜன் மறைத்துவிட்டு மோடி அலை ஓயவில்லை என்று கூறியிருக்கிறார். மோடி அலை ஓயவில்லை என்று அவர் சொல்லி அவர் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் யதார்த்த உண்மை பாஜகவுக்கு எதிரான, மோடிக்கு எதிரான அலை வீசுகிறது.
இவ்வாறு கூறினார்.