Skip to main content

மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி: ரஞ்சன் கோகோய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை பெற்றிருக்கிற நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து ரஞ்சன் கோகோய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முன்னாள் தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் நீதிமன்றத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து மன்னிக்க முடியாத குற்றத்தை பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது.

 

Ranjan Gogoi



 

உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகிப்பவர்கள் ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகள் வரை எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நீண்டகால மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபு திரு. ரஞ்சன் கோகோய் நியமனத்தின் மூலம் மீறப்பட்டுள்ளது. மறைந்த பா.ஜ.க.வை சேர்ந்த அருண் ஜெட்லி இதே கருத்தை ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார். அவரது கூற்றின்படி அந்த இடைவெளி மீறப்பட்டால் நீதிபதியின் நடவடிக்கைகளில்  நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசு தலையிடுகிற நிலை ஏற்படும் என்று மிகத் தெளிவாக கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பா.ஜ.க. முக்கியத்துவம் அளித்திருந்தால் இன்றைக்கு இத்தகைய நியமனம் நடைபெற்றிருக்காது. இந்த நியமனத்தின் மூலம் நீதிமன்ற அமைப்பின் மீது கரும்புள்ளி விழுந்திருக்கிறது. 
 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த ரஞ்சன் கோகோய் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த தீர்ப்புகள் நரேந்திர மோடி ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. நாடு முழுவதும் மக்களாலும், அனைத்து எதிர்கட்சிகளாலும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்ட ரபேல் ஊழல் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தில் ரஞ்சன் கோகோய் தான் தள்ளுபடி செய்தார். எந்த பாபர் மசூதியை யார் இடித்தார்களோ, அவர்களிடமே அந்த சர்ச்சைக்குரிய இடத்தை வழங்கி, ராமர் கோவில் கட்டுவதற்கு 2.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியவரும் ரஞ்சன் கோகோய் தான். இந்தத் தீர்ப்பை இந்தியாவில் வாழ்கிற 20 கோடி இஸ்லாமியர்களும் கட்டுப்பாடுடன் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் மனதில் ஆறாத வடு ஏற்பட்டு விட்டதை எவரும் மறுக்க முடியாது. அதேபோல, அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்காணித்தவரும் இவரே. இதன்மூலம் அசாமில் வாழ்ந்து கொண்டிருந்த 12 லட்சம் இந்துக்களும், 7 லட்சம் முஸ்லீம்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 370 வழங்கிய சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க. அரசு நீக்கியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தவரும் இவரே. இத்தகைய தீர்ப்புகளின் மூலம் பா.ஜ.க.வுக்கு நீதித்துறையின் மூலம் ஏற்பட இருந்த பல்வேறு ஆபத்துகள் காப்பாற்றப்பட்டதை எவரும் மறந்திட இயலாது. 


 

 

திரு. ரஞ்சன் கோகோய் நியமனம் குறித்து எழுகிற குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாத பா.ஜ.க.வினர், முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ராஜ்யசபை உறுப்பினராக காங்கிரஸ் பரிந்துரை செய்தது என்கிற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991 இல் ஓய்வு பெற்ற ரங்கநாத் மிஸ்ரா, 6 ஆண்டுகள் கழித்து 1998 இல் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரஞ்சன் கோகோயைப் போல, குடியரசுத் தலைவரின் நியமனத்தின் மூலமாக ரங்கநாத் மிஸ்ரா மாநிலங்களவை உறுப்பினராக ஆகவில்லை.   எனவே, மக்களைத் திசைதிருப்புகிற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டில் எந்த நியாயமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
 

அதுபோல, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு. சதாசிவம் ஓய்வு பெற்ற மூன்று மாதங்களில் கேரள மாநில ஆளுநராக பா.ஜ.க. அரசு நியமித்தது. குஜராத் மாநிலத்தில் செராபுதீன் என்கவுண்டர் வழக்கில் சம்மந்தப்பட்ட அமித்ஷாவை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியதற்காகத் தான் ஆளுநர் பதவி திரு. சதாசிவத்திற்கு வழங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு அப்போது எழுந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதைப்போல நீதிபதிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு நியமனங்களின் மூலம் சலுகை வழங்க முற்பட்டால் நீதிமன்றங்களின் மாண்பு பறிபோய்விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. 


 

 

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக பா.ஜ.க. அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் தவே கடுமையான விமர்சனத்தை செய்திருக்கிறார். ‘இந்த நியமனம் கடுமையான ஆட்சேபனைக்கு உரியது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உச்சநீதிமன்ற  நீதிபதியாக அவர் இருந்தபோது செய்ததற்கெல்லாம் பலனாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது” என்று மிக வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். இதைவிட வேறு கடுமையான விமர்சனத்தை வேறு எவரும் செய்ய முடியாது.
 

எனவே, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை பெற்றிருக்கிற நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து  திரு. ரஞ்சன் கோகோய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் நீதிமன்றத்தின் மாண்பு, சுதந்திரம் ஆகியவற்றிற்கு துடைக்க முடியாத களங்கத்தை செய்த குற்றச்சாட்டிற்கு அவர் ஆளாக நேரிடும் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த காலியிடத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர். அரசியல் பயணம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.