சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிவகாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால், எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கறுப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக அதிமுக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திமுக அரசைக் கண்டித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து, சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
கைதான ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் “அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை தேர்ந்தெடுத்தார்கள். இதனை அங்கீகரிக்காமல், கோரிக்கையை ஏற்காமல் ஜனநாயகப் படுகொலை செய்த திமுக ஆட்சியைக் கண்டித்து ஜனநாயக வழியில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை வலுக்கட்டயமாகக் கைது செய்துள்ளனர். அவர்களோடு சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக, சிவகாசியில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியல் போராட்டமும் நடத்தியிருக்கிறோம்.
இதன்மூலம் ஆளும் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏதோ சர்வாதிகாரப் போக்கில், ஆணவப் போக்கில் ஆட்சி தங்களிடம் இருக்கிறது என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியை நசுக்கி விடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம். 50 ஆண்டுகள் பூர்த்தியாகி பொன்விழா கொண்டாடி 51வது ஆண்டு தொடக்க விழாவை நாங்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இது திமுக தலைவருக்குப் பொறுக்கவில்லை. திட்டமிட்டு அதிமுக தொண்டர்களையும் தலைவர்களையும் நசுக்க வேண்டும் என தீபாவளி பண்டிகை வரும் நேரத்தில் அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்துள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயகப் பாதைக்கு இந்த அரசு திரும்பவேண்டும். மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளையும் மதிக்க வேண்டும்” என்றார்.