தனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்குதேசம் கட்சியின் மாநில மாநாடு ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி பொருட்காட்சித் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமைதாங்க, ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் அதில் கலந்துகொண்டனர். அப்போது சில தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவை ‘வருங்கால பிரதம மந்திரி’ என அழைத்து உற்சாகப்படுத்தினர்.
பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சி வலுவான நிலையில் இருப்பதற்கு கட்சியின் கடைநிலை ஊழியர்களே காரணம். அவர்கள் மூலமாகவே இனிவரும் காலங்களிலும் நாம் வெற்றிபெறப் போகிறோம் எனத் தெரிவித்தார். மேலும், ஆந்திர மாநிலத்திற்கு தரவேண்டிய எந்தவிதமான சலுகைகளையும் மத்திய அரசு தரமறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், என்னை வருங்கால பிரதமர் என வர்ணித்தனர். உண்மையில் எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் கிடையாது. இதற்கு முன்பாக இரண்டு முறை அதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்வதற்காக அதனை நிராகரித்தேன் என வெளிப்படையாக அறிவித்தார். அதேபோல், கர்நாடக தேர்தலைப் போலவே ஆந்திராவிலும் பா.ஜ.க. தோல்வியைத்தான் தழுவும் எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் அறிவித்தபோது சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட காரணங்களால் தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதேபோல், நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.