தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.
அதே சமயம் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில் 199 தொகுதிகளுக்கு ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில், 115 தொகுதிகளை பாஜக கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பாஜக சார்பில் பஜன்லால் சர்மா பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.
முன்னதாக ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்நிலையில் ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் போட்டியிட்டார். இவர் பாஜக அமைச்சரை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் குன்னார் 12 ஆயிரத்து 750 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.