Skip to main content

“சங்பரிவார் கூட்டத்தை எதிர்த்து நிற்கும் தமிழக முதல்வரோடு கைகோர்த்து நிற்போம்...” - ஆ. ராசா

Published on 05/11/2022 | Edited on 05/11/2022
A Raja condemn to hindi in trichy

 

திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா சிறப்புரை ஆற்றினார்.

 

“1937 ல்  இந்தியை ராஜாஜி திணித்தபோது பெரியார் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திருச்சியில் நடத்தினார். இந்தி மூலம் இந்துத்துவாவைக் கொண்டு வருவதற்கு ஒரே காரணம் தமிழர்களின் அடையாளத்தை அழிப்பதற்காகவே. இந்து சமய அறநிலையத்துறை என்பது துவங்கும்போது இதில் இந்து என்கிற வார்த்தை பயன்படுத்தக்கூடாது என்று அரசிற்கு கடிதம் எழுதியவர் அன்றைய காசிபிள்ளை.

 

அனைவரும் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் மொழி. ஆனால், சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து இந்துத்துவா பண்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்று பாஜக இந்தியைக் கொண்டு வருகிறது. ஜாதியும், மதமும் வேண்டுமென்றால் நம்மைப் பிரிக்கும் ஆனால் மொழி மட்டும்தான் நம்மைச் சேர்க்கும். இனத்தாலும் மொழியாலும் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒற்றை குடைக்குள் தமிழ் என்ற மொழிக்குள் ஒன்றிணைத்தவர் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின்.

 

அணிசேரா நாடுகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதிய அன்றைய பிரதமர் நேரு, சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியை நாங்கள் திணிக்கமாட்டோம் என்று கடிதம் எழுதி இருக்கிறார் என்று அன்று அண்ணா பொதுக்கூட்டத்தில் பேசினார். எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் நாடு, எது வரை நீள்கிறதோ அதுவரை உன் எல்லை. இது கலாச்சார பண்பாட்டு அடையாளம். கீழப்பழுவூர் சின்னச்சாமி அன்று திருச்சி ரயில் நிலையத்தில் முதலமைச்சர் பக்தவச்சலம் வந்தபோது இந்தியைத் திணிக்க வேண்டாம் என்று போராடினார். அப்படிப்பட்ட அவருடைய திருச்சியில் பேசுவது எனக்குப் பெருமிதம்.

 

அன்று பெரியாருக்கும், அண்ணாவிற்கும், கலைஞருக்கும் எதிராக வந்த ஆரியமும் சமஸ்கிருதமும் இன்று பல மடங்கு உயர்ந்து தமிழக முதலமைச்சருக்கு வந்துள்ளது. ஆனால் அவர்கள் மூன்று பேரினுடைய இணைந்த சக்தியாக இன்று ஒரே தலைவராக சங்பரிவாரையும் இந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார். இந்தியை நாங்கள் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. தேவைப்பட்டால் படித்துக் கொள்ள வேண்டியதுதான். என்னை 15 மாதம் சிறையில் வைத்தார்கள் அங்கு நான் இந்தியைக் கற்றுக் கொண்டேன். தற்போது இந்தி மறந்துவிட்டது. வேண்டுமென்றால் மீண்டும் 15 மாதங்கள் சிறையில் வைத்தால் கற்றுக் கொள்ளப் போகிறேன்.

 

ஒரு ஓவியம் என்றால் பல வண்ணங்கள் கலந்ததுதான். ஒரே வண்ணத்தில் ஓவியம் வரைய வேண்டும் என்றால் அதற்குப் பெயர் ஓவியம் என்று கூற முடியாது. அதேபோல்தான் இந்தி மட்டும் என்றால் இந்தியா இருக்காது என்று கலைஞர் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் ஒற்றை மொழி என்ற கொள்கையால் மற்ற மாநிலங்களின் இன பாரம்பரியங்களை அழிக்க முயற்சிக்கும் சங்பரிவார்கள் கூட்டத்திற்கு எதிர்த்து நிற்கும் தமிழக முதல்வரோடு கைகோர்த்து நிற்போம்” என பேசினார்.

 

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்