சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியும் ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியும் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.
அதனால் இப்போதைய அரசியலைவிட வருங்கால அரசியலிலும் கட்சித் தலைமையிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் இறங்கி விட்டார் சண்முகம்.
இதற்கு அச்சாரமாக மாவட்டம் முழுவதும் இருக்கும் கட்சிப் பதவிகளில் இருப்பவர்களை கடாசி விட்டு, தனது விசுவாசிகளுக்கு கட்சிப் பதவிகளை வாரி வழங்கி வருகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த ராஜரத்தினம், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மாஜி எம்.பி. ஏழுமலை, அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, வக்கீல் அணி செயலாளர் கொடுமுடி சேரலாதன், ஐ.டி. விங் மணவாளன், ஒலக்கூர் ஒ.செ.ராஜேந்திரன், விக்கிரவாண்டி ஒ.செ. சேவல்வேலு, செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜ், மரக்காணம் பேரூர் செயலாளர் கணேசன் ஆகியோரின் பதவிகளுக்கு வேட்டு வைத்துவிட்டார் சண்முகம்.
மா.அ.த.வாக செஞ்சி கண்ணன், எம்.ஜி.ஆர். ம.செ.வாக எஸ்.பி.ராஜேந்திரன், மா.து.செ.வாக மரக்காணம் கணேசன், மகளிரணி செயலாளராக கிளியனூர் தமிழ்ச்செல்வி, இவர்கள் தவிர மாணவரணி, ஐ.டி. விங், வக்கீல் அணி, விவசாய அணி என அனைத்துப் பதவிகளுக்கும் தனது விசுவாசிகளின் பட்டியலைக் கொடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் ஒப்புதலுடன் கடந்த 27-ஆம் தேதி பட்டியலையும் ரிலீஸ் பண்ணிவிட்டார் சண்முகம்.
அதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வரும் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து தனது ஆட்களுக்கு பதவிகளை அள்ளி வழங்கி ஆனந்த மடைந்திருக்கிறார் சண்முகம். ஆனால் பதவி இழந்தவர்கள் மத்தியில் ஆங்காரமும் கோபமும் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சண்முகத்தால் பதவி பறிக்கப்பட்ட செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜனின் தந்தை ரங்கநாதன், நீண்ட நெடுங்காலமாக அ.தி.மு.க.வில் இருப்பவர், வசதி வாய்ப்புகளுக்கும் குறைவில்லாதவர். செஞ்சி பகுதியில் செல்வாக்கு மிக்கவர்.
சமீபத்தில் செஞ்சியிலிருந்து களவாய்—-சேத்துப்பட்டு ஊர்களை இணைக்கும் சாலைக்கான டெண்டருக்கு விண்ணப்பம் போட்டார் ரங்கநாதன். ஆனால் அமைச்சர் சண்முகத்தின் கைங்கர்யத்தால் தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதனால் கடுப்பான ரங்கநாதன், சமீபத்தில் செஞ்சி அரசு விருந்தினர் விடுதியில் இருந்த அமைச்சர் சண்முகத்திடம் கேட்டபோது, அலட்சியமாகப் பேசினாராம் அமைச்சர்.
இதனால் மேலும் உஷ்ணமான ரங்கநாதன், “நான் பரம்பரை பணக்காரன், சாலைப் பணி தரமா இருக்கணும்தான் டெண்டர் போட்டேன். இந்த டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியம் இல்லை'' என ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறி விட்டாராம்.
நாம் விழுப்புரம் நகர சீனியர் ர.ர.ஒருவரிடம் பேசியபோது, "எங்க அம்மா மற்றும் சின்னம்மாவின் ஆசியுடன் டாக்டர் லட்சுமணன் மா.செ.வாகி, ராஜ்யசபா எம்.பி.யுமானார். கட்சிக்குள் அவரின் திடீர் ஸ்பீடால், சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஏகப்பட்ட பேர் லட்சுமணனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அம்மா மரணம், சின்னம்மா ஜெயில்ல என நிலைமை மாறியதும் சண்முகத்தின் கை ஓங்கியது, போனவர்கள் எல்லாம் திரும்பி வந்தார்கள். விழுப்புரம் தெற்கு மா.செ. குமரகுரு எப்போதுமே எடப்பாடியின் நிழவில் இருப்பவர். ஆனால் சண்முகமோ தன்னை தனித்துக் காட்டவேண்டும் என நினைப்பவர். அமைச்சருக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்துவது அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் தான்'' என்றார். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்தின் சடுகுடு அரசியல் ஜரூராக நடக்கிறது.