வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், ‘புதிய பார்வை’ கூட்டணி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவருமான க.சக்திவேல் நம்மிடம், “தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், நேர்மை இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ‘புதிய பார்வை’ கூட்டணி 2019-இல் உருவாகியது.
இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னைத் (க.சக்திவேல்) தேர்ந்தெடுத்துள்ளனர். துணை முதல்வர் வேட்பாளர்களாக எம்.எல்.ரவி (தேசிய மக்கள் சக்தி கட்சி) மற்றும் வீரா.சிதம்பரம் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி) ஆகியோர் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் 120 சட்டமன்ற வேட்பாளர்களை முதல் கட்டமாக கடந்த 21.09.2020 அன்று ஈரோட்டில் அறிவித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறோம். மீதமுள்ள 114 தொகுதிகளுக்கும் வருகின்ற ஜனவரியில் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளோம்.
‘அனைவருக்கும் வேலை, வறுமையை ஒழித்தல், லஞ்சம் ஊழல் இல்லா வெளிப்படையான நிர்வாகம். கல்வி, மருத்துவம் அனைவருக்கும் இலவசம். விவசாயத்திற்கு முன்னிரிமை, அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் அடிப்படையாக்குதல். விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்தல். பூரண மது விலக்கு, எளிமையான அரசியலே ஏழைகளுக்கு அதிகாரம்.’ இதுவே எங்கள் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம்.
புதிய பார்வை கூட்டணியின் மாற்றத்திற்கான மக்கள் சந்திப்பு பயணம் வரும் 2021 ஜனவரி 5ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக சென்னைக்கு 2021 ஜனவரி 11ஆம் தேதி வந்தடைகிறது.
2006 முதல் எங்களுக்குத் தேர்தல் அனுபவம் உள்ளது. அப்போது முதல் மக்களைச் சந்தித்து வருகிறோம். மக்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்து பல்வேறு பணிகளைச் செய்துவருகிறோம். அதனால் இத்தேர்தலை மக்களின் ஆதரவோடு சந்திக்க இருக்கிறோம்” என தெரிவித்தார் இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சக்திவேல்.