Skip to main content

அரசியலில் கிழக்கும் மேற்கும் தெரியாத தமிழிசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
Tamilisai Soundararajan - anbumani


தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி  அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை மறுநாள் (28.06.2018) வியாழக்கிழமை பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பாட்டாளி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா தலைமையில் நடந்த சமூகநீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியதன் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி பாட்டாளி மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார்.

 

 

தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாப்பதற்காக 1950-ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் 1987-ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டம் தான். அந்தப் போராட்டம் தான் தமிழகத்திலுள்ள 108 சமுதாய மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்ற மிகப்பெரிய உரிமையை பெற்றுக் கொடுத்தது. அந்தப் போராட்டத்தால் 108 சமுதாயங்கள் பயனடைந்தாலும் போராட்டத்தின் போது ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டதும், அதன் பாதிப்புகளை அனுபவித்ததும் வன்னியர் சமுதாய மக்கள் தான். அம்மக்களுக்கு போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ந்து தான் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் சில தீர்வுகளை வழங்கினார்கள்.
 

இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகக் காவல்துறையினர் மட்டுமின்றி, இந்திய துணை இராணுவப் படைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டவர்கள் வன்னியர் சமுதாயத்தினர் தான். காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் வாங்கியும், கொடூரமான தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியும் 21  ஈகியர்கள் தங்களின் உயிர்களை தியாகம் செய்தனர். அவர்கள் செய்த தியாகத்தை அப்போது வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் பயனடைந்து வரும் மற்ற சமுதாயத்தினர் போற்றி வருகின்றனர். அத்தகையதொரு போராட்டத்தை நம்மால் முன்னெடுக்க முடியவில்லையே என்பது தாம் சமூகநீதி தழைக்க வேண்டும் என விரும்பும் சமுதாயங்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.
 

இந்த வரலாறும், தியாகங்களும் அரசியல் களத்தில் வேர்விட்டு மரமாகி நிற்கும் இயக்கங்களுக்கும், அவற்றின் தலைவர்களுக்கும் தெரியும். என்றோ பெய்த மழையில், எப்போதோ முளைத்த காளான்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கற்பூரத்தின் வாசனையை உணர்ந்து கொள்ள முடியாதது கழுதையின் குற்றமே தவிர, கற்பூரத்தின் குறைபாடு அல்ல. தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. மாறாக மற்ற கட்சிகளின் தலைவர்களை நாகரிகம் இல்லாமல் விமர்சித்து பேசுவதன் மூலம் மிகக்கேவலமான முறையில் அரசியல் நடத்துவதற்கு மட்டுமே தெரியும். தமிழக அரசியலில் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு மோசமான தலைவராகியிருப்பவர் தமிழிசை மட்டுமே.

 

 

 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையும் கடித்த கதையாக தமிழகத்தில் மற்ற கட்சிகளையும், சமுதாயங்களையும் விமர்சித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்போது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தையும் விமர்சித்திருப்பது அரசியலில் அவருக்கு அழிவு காலம் தொடங்கி விட்டதையே காட்டுகிறது. சாக்கடையில் கல் வீசினால் அது நம் மீதும் பட்டுவிடும் என்ற எண்ணத்தில் சில நேரங்களில் சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது மனித இயல்பு. ஆனாலும், ஒரு கட்டத்தில் நாற்றத்தையும், நோய் பரப்புவதையும் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் சாக்கடையை அங்கிருந்து அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ்நாட்டு அரசியலிலும் அத்தகைய தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது.
 

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாய மக்களின் சமூகநீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்காத தமிழிசை தமது செயலை நியாயப்படுத்தி வருகிறார். மானமுள்ள  தீரத்திற்கு பெயர்போன மக்கள் இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள்.

 

 


சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  தமிழிசை மன்னிப்புக் கோர வலியுறுத்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை மறுநாள் (28.06.2018) வியாழக்கிழமை பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இதில் பா.ம.க. நிர்வாகிகளும், கட்சி சார்பின்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்