முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகக் காலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மீன்சுருட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமன். ஜெயராமனின் சகோதரரின் மைத்துனர் சின்னபிள்ளை. காடுவெட்டி கிராமத்தில் உள்ள நாட்டாமைகளில் சின்னபிள்ளையும் ஒருவர். குருவின் குடும்பத்திற்கும், சின்னபிள்ளை குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. பாதை பிரச்சனையும் உள்ளது. குரு மறைந்த பிறகு அவ்வப்போது இதுதொடர்பாக குருவின் குடும்பத்தினருக்கும், சின்னபிள்ளை குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்றும் குருவின் வீட்டாருக்கும், சின்னப்பிள்ளை வீட்டருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை நடந்துள்ளது. இதனை அறிந்த குரு மகன் கனலரசு, குருவின் மருமகன் மனோஜ் ஆகியோர் வந்துள்ளனர். சின்னபிள்ளை தரப்புக்கும், கனலரசு தரப்புக்கும் நள்ளிரவில் வாய்த் தகராறு நடந்துள்ளது. பின்னர் இருதரப்பும் மோதிக்கொண்டது. இதில் அரிவாள் வெட்டு, உருட்டுக்கட்டை அடி என விழுந்துள்ளது. குருவின் மருமகனுக்குத் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கனலரசனுக்கும் லேசான தாக்குதல் நடந்துள்ளது.
மனோஜ், கனலரசு ஆகிய இருவரும் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்னபிள்ளை தரப்பிலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்றும், அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மீன்சுருட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னபிள்ளையை மீன்சுருட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.