Skip to main content

“நிவாரணத் தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கிறது..” - அண்ணாமலை 

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

"All the relief amount is given by the central government.." - Annamalai

 

சீர்காழி தாலுகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

சீர்காழி தாலுகா பகுதியில் கடந்த 11 ஆம் தேதி அதீத கனமழை பெய்தது. இதன் காரணமாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை அளவு பதிவானது. சீர்காழியில் 44 சென்டிமீட்டர், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்தது. இந்தப் பாதிப்புகள் குறித்து பார்வையிடவும் நிவாரணம் வழங்கவும் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார்.

 

கொள்ளிடம் ஒன்றியம் கொடிக்கால்வெளி கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 120 குடியிருப்புகளையும், குறிப்பாக இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் உட்பகுந்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த வீடுகளைப் பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, நூறு பேருக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

அங்கிருந்து நல்லூர், அகரவட்டாரம், வேட்டங்குடி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டார். அங்கு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து திருவெண்காடு, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பூம்புகார் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பார்வையிட்டார்.

 

"All the relief amount is given by the central government.." - Annamalai

 

இதனிடையே, ராதாநல்லூர் கிராமத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “தமிழக அரசின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது எந்த வகையிலும் போதாது. ஐயாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது பயிர்கள் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். ஆனால், தற்பொழுது பத்தாயிரம் ரூபாய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வேலையில்லாமல் உள்ள குடும்பங்களுக்கு 30 நாட்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை வந்த உள்துறை அமைச்சர் சந்திக்காதது பற்றி கேட்டதற்கு, “பிரதமரையோ உள்துறை அமைச்சரையோ சாதாரண மக்கள் கூட யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் பேருந்து எறிந்தது. அதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. முறையாக விசாரணை செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். இதற்காக கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு அமைத்து டெல்லி சென்று இரண்டு நாட்களில் நிதி அமைச்சரையும், வேளாண் துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட உள்ளனர்” என்றார்.

 

‘2024-ல் மெகா கூட்டணி அமையும். அதில் டிடிவி தினகரனுக்கு ஒரு சதவீதம் கூட இடமில்லை’ என எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார் என்பது குறித்துக் கேட்டதற்கு, “இது தொடர்பாக கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. எடப்பாடி இங்கு வந்திருக்கிறார்கள். பத்திரிகை நண்பர்களைச் சந்தித்துள்ளார்கள். குறிப்பாக இன்னொரு கட்சியைப் பற்றி பேசி உள்ளார்கள். இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டியது எடப்பாடியிடம்.

 

முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கின்ற நிதியிலிருந்து வருகிறது. எனவே, மத்திய அரசு கொடுக்கின்ற நிதியோடு மாநில அரசும் சேர்த்து கூடுதலாக கொடுக்க வேண்டும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீர்காழியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் வெடிக்க வைத்து அழிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Detonation of mysterious object washed ashore in Sirkhazi

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பாதுகாப்புடன் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்ஞைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றனர் போலீசார்.

Detonation of mysterious object washed ashore in Sirkhazi

இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் அந்த கருவியானது வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு அதனுள் அந்த கருவியை வைத்து வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக போலீசாரும் இருந்தனர்.

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்