Skip to main content

சோஷியல் டிஸ்டன்ஸ்ஸை மறந்த போலீசார்! - காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க.வை எதிர்த்தும், குதிரை பேரம் நடப்பதைக் கண்டித்தும் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக இன்று (27.07.2020) காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி, இன்று ராஜ்பவனை முற்றுகையிடுவதற்கு பதிலாக, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ஆனந்தபவன் ஹோட்டல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைவர்கள் டாக்டர் ஜெயக்குமார் எம்.பி, வசந்தகுமார் எம்.பி., டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி., மற்றும் மாவட்ட காங்கிரஸ்  தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், கே. வீரபாண்டியன் மற்றும் கட்சியினர் என சுமார் 130 பேர் கலந்து கொண்டனர். 

 

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி கண்டன முழக்கங்களுடன் பேரணி நடத்த முயன்ற கதர்சட்டையினரை போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்ல மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு சிறிய போலீஸ் வேன்களை வரவழைத்திருந்தனர் போலீசார். கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம்  அமலில் இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது எடப்பாடி அரசு. அதன்படி, ஒரு வேனில் அதிகபட்சம் 10 பேர் அமர வைக்கலாம். ஆனால் அந்த வேனில் 30 பேரை திணித்து ஏற்றியுள்ளனர் போலீசார். இதேபோல் சமூக இடைவெளியுடன் 20 பேரை அமர வைக்கக்கூடிய பேருந்தில், 50-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றியுள்ளனர். குதிரை பந்தயம் நடக்கும்  கிண்டி எம்.ஆர்.சி. யில் காங்கிரசாரை அடைத்து வைத்திருந்தனர் போலீசார்.  

 

'குதிரை பேரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் குதிரை பந்தயம் நடக்கும் இடத்தில் நம்மளை அடைத்து வைக்கிறது போலீஸ்' என காங்கிரஸ் செயல் தலைவர்கள் கமெண்ட் செய்ய, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கலகலப்பு உருவானது. மாலை 3.30 மணி அளவில் அவர்களை விடுதலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளை காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. 

 

விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலர் போலீசாரிடம், "சோஷியல் டிஸ்டன்ஸ்ன்னு சொல்றீங்க, எங்களை மூட்டை திணிக்கிற மாதிரி ஏத்திக்கிட்டு வந்திருக்கீங்க. ஆட்டோவுல ஒருத்தர்தான் போகலாம், கார்ல ரெண்டு பேர்தான் போகலாமுன்னு சொல்றீங்க. அதை மீறினா கேஸ் போடுறீங்க. ஆனால் நீங்களே எங்களை இப்படிப் புளி மூட்டை மாதிரி ஏத்தலாமா? எக்ஸ்ட்ரா பஸ் வரவழைச்சிருக்கணும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா?" என்று போலீசாரை கேட்டிருக்கிறார்கள்.  

 

இதற்குக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத போலீசார், "நீங்க ஆர்ப்பாட்டத்துல எப்படி இருந்தீங்கன்னு எல்லோருக்கும் தெரியும். சோஷியல் டிஸ்டன்ஸ் பத்தி நீங்க பேசாதீங்க" ன்னு பதிலடி தந்ததில் கதர் சட்டையினர் கப்-சிப்பாகி விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்