Skip to main content

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று  தீர்ப்பு!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

Verdict today in the Pollachi case that shook Tamil Nadu

தமிழகத்தில் கடந்த 2018 - 2019ஆம் ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும். இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றன. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா (மகளிர்) கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த வழக்கில் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி இந்த வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு என இருதரப்பு வாதங்களும், அரசு சார்பில் பதில் வாதமும் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (28.04.2025) முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025)  தீர்ப்பு வழங்க உள்ளார். காலை 10.30 மணி முதல் 11.00 மணிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகச் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
 

சார்ந்த செய்திகள்