Skip to main content

“அதிமுகவில் உள்ள முக்கியத் தலைவர்கள் திமுகவிற்கு வருவார்கள்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

"Prominent leaders in ADMK will come to DMK" - Minister I. Periyasamy

 

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் பெரியகுளம் வடகரை அரசு பணிமனையின் முன்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், முன்னாள் நகரச் செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த இரண்டு ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசும் போது, “தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சி இல்லை; தமிழ்நாட்டில் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு துறைகளை வைத்து நெருக்கடிகள் கொடுத்தாலும், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவுவார்கள். மேலும் ஆரிய மாயை தோற்றத்தை அகற்றுவதற்காகவே உருவான இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.  

 

இந்தியாவில் உள்ள  முதலமைச்சர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஈடாக இருக்க முடியாது. தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிற்கே முன்னோடியாக துவங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்பது வாய்ச்சொல் அல்ல. அது ஒரே நாடு; தமிழ்நாடு, ஒரே மொழி;  தமிழ் மொழி, ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதுதான். குலக்கல்வி திட்டத்தை அகற்றி அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கியது திராவிட ஆட்சிதான். அனைத்து சமுதாய மக்களும் நீதித்துறையில் இடம் பெற்றதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி. உண்மையான கம்யூனிசத்தையும் எல்லோருக்கும் எல்லாம் சமம் என்ற அடிப்படையை கொண்டு வந்தது தான் திராவிட மாடல் ஆட்சி. 

 

தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரியை பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாத மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் எந்த கட்சிக்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வதற்கு தகுதியில்லை. எடப்பாடி அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. அண்ணா திமுகவில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் திமுக பக்கம் வருவார்கள். ஏனென்றால் அந்த கட்சி ஒரு சாரார் பக்கமே சென்று கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் என்றென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சூரியன் பக்கம் தான் இருக்கிறார்கள். அதனால் தேனி மாவட்டத்தில் பாராளுமன்றத் தொகுதி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்