அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்டு தீவிரப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தநிலையில் சசிகலா வருகையால் அமமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நீக்கி வருகின்றனர்.
சசிகலா வருகையில் அதிமுகவில் உள்ள சிலரோ, அமமுகவில் இணைய தயாராகி வருகின்றனர். இருதலைமையையும் பிடிக்காத சிலரோ கட்சியைவிட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் சிலர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இன்று (03.02.2021) காலை, அண்ணா அறிவாலயத்தில் புரசை ஜி.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில், சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் பகுதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த (கொளத்தூர் பகுதி) மாணவர் அணி இணைச் செயலாளர் எல்.தீபன், கொளத்தூர் தொகுதி முன்னாள் 69வது வட்டப் பொருளாளர் எச்.சங்கர், 69வது வட்ட அவைத்தலைவர் ஸ்டார் மோகன்ராஜ்ராஜா - அ.ம.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வி.கீர்த்திகணேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே.கிருஷ்ணகுமார், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் டிபன் சுரேஷ், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பகுதி துணைச் செயலாளர் கே.முரளி ஐசிப், பகுதி வர்த்தக அணி இணைச் செயலாளர் டி.தினேஷ்குமார், பகுதி வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் ஜி.சிவக்குமார், ஆர்.வீரமணி, 67வது வட்ட அவைத்தலைவர் பால்பூத் சரவணன், பகுதி செயல்வீரர்கள் எஸ்.ஜெயக்குமார், ஏ.சதீஷ்குமார், டி.குணசீலன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளர் ஐ.சி.எப்.முரளிதரன், தலைமைக் கழக வழக்கறிஞர் கே.சந்துரு, புரசை ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.