அரசியல் கட்சிகளையே இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு தள்ளி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்கள் சுயேச்சை கவுன்சிலர்கள் பலரும். அந்த வகையில் ஈரோடு 40வது வார்டில் வெற்றி வாகை சூடியுள்ள வக்கீல் ரமேஷ்குமார், ஈரோடு அரசியல் கட்சிகளின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக 40வது வார்டை உள்ளடக்கிய கருங்கல்பாளையம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் சேவை மையம் என்ற தனி அலுவலகம் அமைத்து அதில் ஊழியர்களை பணியமர்த்தி ரேசன் கார்டு முதல் மக்களின் அத்தியாவசிய பணிகளை முழுக்க இலவசமாக செய்து வந்துள்ளார்.
மக்களிடம் எளிமையாக மிகவும் நெருக்கமாக பழகியதோடு கரோனா நெருக்கடி காலத்தில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் பல ஆயிரம் பேருக்கு உணவு பொருட்கள் வழங்கி அவர்களின் துயரை போக்கியிருக்கிறார். சுயேச்சையாக களத்தில் நின்ற இவரை 40வது வார்டு பொது மக்கள் அபாரமாக வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
கவுன்சிலராக வெற்றி பெற்ற வக்கீல் ரமேஷ்குமாரை அழைத்துக் கொண்டு சென்னை சென்ற அமைச்சர் சு.முத்துச்சாமி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தி பாராட்ட வைத்துள்ளார்.