தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளரான பி.எம்.குமாரின் தந்தை பி.முருகேசன். தி.மு.க. கட்சியின் ஆரம்ப காலத்துத் தொண்டர். இவருக்கு அறிஞர் அண்ணாவின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. 1960- ஆம் ஆண்டு ஒன்றிய துணைசேர்மேனாக இருந்தபோது, அப்பகுதியில் நீண்டநாள் பிரச்சனையான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். மேலும், மிசா காலத்தில் சிறைக்குச் சென்றார். காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார்.
மறைந்த பி.முருகேசனின் நினைவு தினத்தை குறித்தும், அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் அறிந்த உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் போது, அவரின் வீட்டுக்கு சென்று மரியாதை செய்யப் போவதாக அறிவித்தவுடன், ரகசியமாக அந்த குடும்ப நபர்களுக்கு மட்டும் தகவல் சொல்ல, செய்வதறியாமல் குடும்பத்தினர் அவசர ஏற்பாடுகள் செய்தனர். அதற்கு முன் உதயநிதியின் மெய்க்காப்பாளர்கள் பி.எம்.குமாரின் வீடான காஞ்சிபுரத்தை அடுத்த மேல் ஒட்டிவாக்கம் வந்து குடும்பத்தார் மட்டும் உள்ளே இருக்க அனுமதித்தனர்.
பின்னர், உதயநிதி ஸ்டாலின் மதியம் 12.00 மணியளவில் மேல்ஒட்டிவாக்கத்தில் உள்ள பி.முருகேசனின் வீட்டுக்கு வந்து அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்துவிட்டு முருகேசனின் மனைவி ராணி முருகேசனிடம் கலந்துரையாடிவிட்டு அடுத்த கட்டப் பிரச்சாரத்திற்குக் கிளம்பிச் சென்றார்.
நம்மிடம் பேசிய பி.எம்.குமார், "நான் ஒரு பாரம்பரிய தி.மு.க. கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவின் நினைவுநாள் வழக்கம் போல மலர் மாலை செலுத்துவது வழக்கம். ஆனால் சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்வு மேலும் எங்களுக்கு வலுசேர்க்கிறது" என்றார் புன்னகையுடன்.
இந்த நிகழ்வின் போது, உதயநிதியுடன் காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.