மதுரையில் முனிசாலை பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்குப் பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் இன்று திறந்துள்ளோம். படிப்படியாக அனைத்து இடங்களிலும் திறக்கிறோம். கோடைக்காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து வெயிலில் வருபவர்களுக்காக தொடர்ந்து 50 ஆண்டுக்காலமாக அதிமுக நீர் மோர் வழங்குவதை நடத்தி வருகிறது.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். எங்கள் தலைமையின் கீழ் வரும் கட்சியினை கூட்டணியில் நாங்கள் சேர்த்துக்கொள்வோம். அடுத்த கட்சியினர் அவர்கள் தான் தலைமை எனச் சொல்லலாம். எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு.
ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு நடத்துகிறார். அவர் நடத்திவிட்டுப் போகட்டும். அவர் கடையை விரிக்கிறார். அதிமுக ஒன்றுபட்டுச் சிறப்பாக உள்ளது. ஓபிஎஸ் எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அவ்வாறு செயல்படுகிறார். எதாவது செய்துகொண்டே இருக்க வேண்டுமே. அரசியல்வாதி என்றால் அதானே.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, நாள்தோறும் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பது போன்று நாள்தோறும் தங்களை பதியவைத்துக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு அரசியல் தந்திரம். அதுபோல் அவர்கள் அப்படியே இருந்துவிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதற்காக அவர்கள் செயல்படுகிறார்கள். அந்த தந்திரம் வெற்றிபெறுமா எனச் சொல்ல முடியாது. மக்கள் தான் எஜமானர்கள். தொண்டர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கம் தான் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.