இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,56,183 -லிருந்து 4,73,105 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476- லிருந்து 14,894 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685- லிருந்து 2,71,697 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 1,86,514 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,42,900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73,792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,739 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டெல்லியில் 70,390, தமிழகத்தில் 67,468, குஜராத்தில் 28,943, ராஜஸ்தானில் 16,009, மத்திய பிரதேசத்தில் 12,448, உத்தரப்பிரதேசத்தில் 19,557, ஆந்திராவில் 10,331, தெலங்கானாவில் 10,444, கர்நாடகாவில் 10,118, கேரளாவில் 3,603, புதுச்சேரியில் 461 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா பரவல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், சென்னையில் இன்று ஏழாவது நாளாக ஊரடங்கு முழுக்கட்டுப்பாட்டுடன் தொடர்வது பாராட்டத்தக்கது. இதே கட்டுப்பாடு நீடிக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுடன், அறிகுறி உள்ளவர்கள் சோதனையும் செய்து கொள்ள வேண்டும். அது தான் கரோனா இல்லாத சென்னையை உருவாக்கும் என்றும், சென்னையில் ஒரே நாளில் 14,000 கரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு உயர்த்த வேண்டும்; அதன் மூலம் கரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.