பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், பிரம்மபுரா கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி குமாரி. கர்ப்பமாகி இருந்த இவர், மருத்துவப் பேறுக்காக தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்படி, கடந்த 8ஆம் தேதி அஞ்சலி குமாரிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இருப்பினும், அஞ்சலிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, அஞ்சலி குமாரியின் குடும்பத்தினர், அவரை ஒரு தனியார் பயிற்சியாளரிடம் வயிற்று வலி குறித்து விசாரித்துள்ளனர். அந்த பயிற்சியாளரும், அஞ்சலியின் வயிற்றில் போடப்பட்டிருந்த தையல்களை பிரித்து பார்த்துள்ளார். அப்போது, ஒரு பெரிய சதுர துண்டு துணி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, இந்த செயல்முறை குறித்து வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி அஞ்சலி குமாரியை அந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது, ‘இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும். தற்போது நோயாளியை முழு உடல்நிலைக்கு மீட்டெடுப்பதில் தங்கள் முதன்மை கவனம் செலுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.