மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் என உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைசர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை சென்றார். அங்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார். சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். தொடர்ந்து இத்திட்டத்தின் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். இந்நிலையில் கள அய்வில் முதலமைச்சர் திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்து அதற்கென பல திட்டங்களை வகுத்து வருகிறது. அதே சமயத்தில் அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காட்டப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடைய திட்டங்களாக இது அமைந்திருக்கிறது. வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படக்கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட தொகையினை விரைந்து முழுமையாக செலவு செய்து முடியுங்கள். இன்றைய ஆய்வின்படி கடந்த ஆண்டிற்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகள் அதிகளவில் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டு பணிகளைத் துரிதப்படுத்துங்கள். மக்கள் பணி என்பது முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். பெரும் நம்பிக்கையோடு மக்கள் உங்களை கோரிக்கைகளை நாடி வந்து தங்கள் மனுக்களை சமர்ப்பிக்கின்றார்கள்; பெரும் எதிர்பார்ப்போடு அளிக்கின்றார்கள்; அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் தான் அரசு. எனவே, உங்களால் இயன்றவரை அந்தப் பிரச்சனையை, தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். நான் முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப் போல, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை.” எனக் கூறியுள்ளார்.