Skip to main content

அவ்வளவு உயரம் ஏறி பெரியார் அடித்திருக்க முடியாது... பேரணியில் கலந்து கொண்ட திருச்சி செல்வேந்திரன் பரபரப்பு பேட்டி!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சேலத்தில் 1971-ல் பெரியார் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட பெரியார் தொண்டர் திருச்சி செல்வேந்திரன் நக்கீரனுக்கு அளித்த பேட்டி.

ரஜினிகாந்த் பேசியதை கேட்டீர்களா? அந்த ஊர்வலத்தில் என்ன நடந்தது? 

டிரக்கில் ராமன், சீதை "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' கட் அவுட் வைத்து ஊர்வலம் நடந்தது. ரஜினி சொன்னதுபோல நிர்வாணமாக அல்ல, முழு உடையோடு, அலங்காரங்களோடு தான் இருந்தது. ஊர்வலத்துக்கு தி.மு.க. அரசு கடுமையான தடை போட்டிருந்தது. ஊர்வலம் வரும்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், ஜன சங்கத்தினரும் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தனர். போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்து, சாலையின் இருபக்கமும் நிற்க வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குரூப்பை சுற்றியும் வட்டமாக போலீசார் நின்றனர்.

 

selventhiran



ஊர்வலத்தில் ஒரு டிரக்குக்கு நான் இன்சார்ஜ். அதில்தான் ராமன், சீதை சிலைகள் இருந்தன. சிலைகள் தூக்கிக் கொண்டு வருவதாக கோஷங்கள் மட்டும்தான் எழுப்பினார்கள். கறுப்புக் கொடி காட்டிய கும்பலில் ஒருவர் எங்களை நோக்கி செருப்பால் அடித்தார். நான் உள்பட இரண்டு பேர் டிரக்கில் நின்றுகொண்டிருந்தோம். சிலை எங்களைவிட உயரமாக இருந்தது. அவர் அடித்த வேகத்தில் செருப்பு சிலை மீது பட்டு கீழே விழுந்தது. சடசடவென்று இரண்டு, மூன்று செருப்புகள் விழுந்தன. இதைப் பார்த்த தி.க.வினர் கைதட்டினார்கள். ஏனென்றால் ஜனசங்கத்தினரே சிலை மீது அடிக்கிறார்களே என்று. அதற்குப் பிறகு கோபம் வந்து இன்னும் வேகமாக அடித்தார்கள். அதில் ஒரு செருப்பு என் முகத்தில் பட்டது. அப்போது கீழே ஊர்வலத்தில் இருந்த ஜனங்கள் வண்டியில் ஏறி சிலையை அடிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு அப்புறம் நாங்களும் ஒரு அடி அடித்தோம். இதுதான் நடந்தது. அதற்குப் பிறகு ஊர்வலம் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அரை மைல் தள்ளி பெரியார் டிரக்கில் வந்துகொண்டிருந்தார்.

"துக்ளக்' பத்திரிகையில் பெரியாரே ராமரை அடிக்கிற மாதிரியும், கலைஞர் கைத்தட்டுகிற மாதிரியும் சொல்கிறார்களே? 

அது அவர்களே போட்ட ஒரு கார்டூன்.

நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு போனதா? 

விசாரணை நடந்தது. நீதிபதி, "அவ்வளவு உயரம் ஏறி பெரியார் அடித்திருக்க முடியாது. அது நம்பும்படியாக இல்லை' என்று சொன்னார். வழக்கு தள்ளுபடியானது.

நிர்வாணமாக கொண்டு வந்தார்கள் என்று ரஜினி சொல்கிறார்? 

இல்லவே இல்லை. அந்த படத்தைப் பார்த்தாலே தெரியுமே. அந்த படங்கள் இருந்தால், எடுத்து பார்த்தால் தெரியும்.


ரஜினி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? 

அரசியல்தான். இப்போது இதனை ஒரு ஆயுதமாக எடுக்கிறார்கள்.

-ஜெ.தாவீதுராஜ்

 

 

சார்ந்த செய்திகள்