பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முறையாக செயல்படவில்லை என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மத்திய அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லி சென்றிருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். முதலில் காவிரி மேலாண்மை அமைக்காத நிலையில் தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து ஆளுநர் பிரதமரிடம் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தமிழகத்தில் இராணுவக் கண்காட்சி நிகழ்ச்சியைப் பார்வையிட பிரதமர் மோடி வரும்போது, அவருக்கு கறுப்புக்கொடி காட்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.