உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறிவரும் சூழலில், அரசியல் கட்சிகளும் தகவல் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துக்கொண்டு தங்களின் கொள்கைகளை நேரடியாக மக்களிடம் கொண்டுசெல்ல பயன்படுத்துகிறார்கள். அந்தவகையில் கடந்த பல ஆண்டுகளாக தனித்த அணியாக இல்லாமல் செயல்பட்டு வந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி, தற்போது முழுமையாக களத்தில் இறங்கியிருக்கிறது.
திமுகவின் கொள்கைகள், செயல்பாடுகளை காலத்திற்கு ஏற்றவகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுசெல்லும் வகையில் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு கடந்த ஆண்டு உருவாக்கபட்டது. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நியமித்திருந்தார். அதன்பின்னர் மாவட்ட, தொகுதிவாரியான நிர்வாகிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றது. நேர்முகத்தேர்வில் எந்தவிதமான பரிந்துரைகளுக்கும் இடம் அளிக்காமல் பார்த்துக்கொண்டார் பிடிஆர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைப்பாளர்களுக்கு எந்தவிதமான செலவையும் வைக்கவில்லை. சுதந்திரமாக செயல்பட தலைமையிடம் இருந்து ஒப்புதல் பெற்றார்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, தொகுதிவாரியாக மொத்தம் 439 பேர் தேர்வு செய்யபட்டு பட்டியல் வெளியானது. அதன்பின்னர், கடந்த வாரம் தொழில்நுட்பப் பிரிவின் துணைச்செயலாளராக தமிழ் பொன்னி, கார்த்திக் மோகன், இசை ஆகியோர் நியமிக்கபட்டனர். இந்நிலையில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தொடக்கவிழா கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தயில் பேசியது குறித்து தொண்டர் ஒரு விவரித்தார்...
“கண்ணியமாக செயல்படவேண்டும். சாதிப் பிரச்சனையை தூண்டும் விதமாக பேசக்கூடாது. தற்பெருமை பேசாமல் இருக்கவேண்டும் என்று பிடிஆர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த அணி மீது பிடிஆர் மிகப்பெரிய நம்பிக்கையும், உறுதியும் வைத்திருக்கிறார். திமுகவின் சொத்தாக இந்த அணி மாற இருக்கிறது. அந்த அளவிற்கான பல்வேறு செயல்திட்டங்களை வைத்து இருக்கிறார். பாஜக போன்ற கட்சிகளில் பெரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு இருக்கிறது. ஆனால், அவர்களின் வேலை மீம்ஸ் போடுவதும், பொய்ப்பிரச்சாரம் செய்வதும்தான். ஆனால், உள்ளதை அப்படியே சொல்வது, வெளிப்படையாக செயல்படுவது போன்ற நோக்கம் உலகத்தில் இருக்கக்கூடிய வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. திமுக சார்பில் புதிய செயலி உருவாகிக்கொண்டு இருக்கிறது. அந்த செயலி நிர்வாகிகளுளிடமும், அதன்பின்னர் பொதுமக்களிடமும் சென்று சேர இருக்கிறது. மக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அதில் தெரிவிக்கலாம். தற்போது மாவட்ட, தொகுதிவாரியாக நிர்வாகிகளை நியமித்து இருக்கிறார்கள். இதன்பின்னர் பூத் வரை நிர்வாகிகள் நியமிக்க பட இருக்கிறார்கள். அதன்பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது இருக்கும் செயல்பாடுகளை ஆராய்ந்து, அணியில் இருக்கும் தவறுகளை சரிசெய்த பின்னர் மீண்டும் செயல்பட வலியுறுத்தப்படும்’‘ என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தேர்வின்போது பல விமர்சனங்கள் எழுந்தன. ‘கட்சிக்காக பல ஆண்டுகளாக சமூகவலைதளத்தில் உழைத்துவருகிறேன். எங்களை தேர்வு செய்யவில்லை’ எனவும், பலரும் பல நிர்வாகிகளிடம் பரிந்துரை செய்யச்சொல்லி கேட்டும் இருக்கிறார்கள்.
இதற்காக விளக்கம் தரும் அவர், ‘சமூக வலைத்தளங்களில் பல ஆயிரக்கணக்கான ஃபாலோவர்களை வைத்து இருப்பவர்களே பிரபலமானவர்கள். அவர்கள் இந்த அணிக்குள் வந்துதான் அங்கீகாரம் பெறவேண்டும் என்பது இல்லை. தொடர்ந்து கட்சி வேலையை செய்யுங்கள். அத்தனை பேரையும் வைத்து இருக்கும் நீங்களே தனியாக இயங்கலாமே. அதன் பிறகு எதற்கு அணியில் வரவேண்டும் என நினைக்கிறீர்கள். இது சமூக வலைதளங்களுக்கான பிரிவு கிடையாது. அதற்கான வேலை என்பது சிறிய அளவுதான். இங்கு பிரதானமே களப்பணிதான். இங்கு யாரும் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் கிடையாது. இத்தனை காலமாக மாணவர் மற்றும் இளைஞர் அணி பிரபலமாக இருந்திருக்கும். இனி தகவல் தொழில்நுட்பப் பிரிவும் பிரபலமாக பேசப்படும்” என்றார் உறுதியாக.
தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட, தொகுதிவாரியான தேர்வின்போது நிர்வாகிகளின் பேஸ்புக் பக்கங்களின் முந்தைய பதிவுகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் போடப்பட்ட பதிவு எப்படி இருந்தது. அந்த கருத்துகள் கட்சிக்கு எந்தளவில் பயனாக இருக்கிறது என்பதையும் பார்க்கிறார்கள். அதன் பின்னரே நேர்காணல் நடத்தபட்டு இருக்கிறது. நேர்காணல் முடிந்த பின்னர் மாவட்ட செயலாளர்களிடம் கட்சியின் செயல்பாடுகளில் நிர்வாகிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை விசாரித்த பின்னரே நியமித்து இருக்கிறார்கள்.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனும் கலந்துகொண்டது, நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உடன்பிறப்புகள் களத்திலும் காட்டுவார்களா என்பதை காலம்தான் உணர்த்தும்.