காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பிரதமர் மோடி பற்றி அவரின் பெயரை உச்சரிக்கும் போது நரேந்திர கௌதம்தாஸ் என உச்சரித்து விட்டு மன்னிக்கவும் என்று கூறிய பிறகு தாமோதர்தாஸ் என கூறினார். மேலும் உண்மையிலேயே பெயரை உச்சரிப்பதில் குழப்பம் ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் பிரதமரை பற்றி குறிப்பிடும் போது பெயர் தான் தாமோதர் தாஸ் ஆனால் செயல்கள் எல்லாம் கௌதம் தாஸ் போல இருப்பதாக தெரிவித்தார்.
இந்த பேச்சு கவுதம் அதானி உடன் சேர்த்து பிரதமர் மோடியை வேண்டும் என்றே இவ்வாறு குறிப்பிட்டதாக கூறியதாகக் கூறி இது குறித்து அசாம் மாநிலத்தில் உள்ள திமாஹசா காவல் நிலையத்தில் சாமுவேல் சாங்ஷன் என்பவர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் பவன் கேரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பவன் கேராவை கைது செய்ய அசாம் போலீசார் டெல்லி வந்தனர். அப்போது பவன் கேரா டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றில் பயணம் செய்ய தயாராக விமானத்தில் அமர்ந்து இருந்தார். அதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து பவன் கேராவை போலீசார் விமானத்தில் இருந்து இறக்கி விட்டனர். அப்போது அவருடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் விமானத்தை விட்டு இறங்கி கோஷமிட்டனர். அதனால் அந்த விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு மாற்று விமானம் மூலம் மற்ற பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவரது கைது குறித்து நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், பவன் கேராவிற்கு வரும் 28 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்கள்.