தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 13 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதன் பின்பு தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதே போல் எடப்பாடி வெளிநாடு பயணம் சென்றதை தொடர்ந்து அடுத்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டனர். மேலும் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஓபிஎஸ் செல்ல இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
கட்டுமானத்துறையில் வெளிநாட்டு தொழில் நுட்பங்களை தமிழகத்திற்கு கொண்டு வர ஓபிஎஸ் வெளிநாடு செல்கிறார் என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது,எடப்பாடி மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரும் வெளிநாடு சென்று முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தொழில் நுட்பத்தை கொண்டு வர சென்றதாக கூறினார்கள். இதனால் ஓபிஎஸ் தரப்பும் அவரது துறை சார்ந்த முதலீடுகள் மற்றும் தொழில் நுட்பத்தை கொண்டு வர திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது.