ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜூன் 1 முதல் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5,200 கோடி செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டு உபயோகத்திற்காக மின்சாரம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மொத்தம் 1.24 கோடி பேர். அதில் 100 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.04 கோடி பேர்” என தெரிவித்தார். “ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவர்களின் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்படும். மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் பல இணைப்புகள் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் இலவச மின்சாரத்தைப் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மின்துறை அதிகாரிகள் பில்லிங் மென்பொருள்களைப் புதுப்பித்து வருகின்றனர். அரசு அறிவித்துள்ள மென்பொருள் ஒன்றில் மக்கள் தங்களது தகவல்களைப் பதிவு செய்த பின் இத்திட்டத்தில் இணைவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் ராஜஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இத்திட்டத்தை உபயோகித்து மின்சாரத் திருட்டை தடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.