வேலூர் மாவட்டம் காட்பாடியில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்விளை வைத்தனர். அப்போது, 'துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட இருப்பதாகவும், அந்த வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் கட்சிக்காரர்கள் எல்லாம் நினைக்கிறார்கள். உங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, கையெடுத்துக் கும்பிட்ட படி பதிலளித்த அவர், ''கொடுத்தா யாருதான் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லோரும் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரிசபை. எனவே தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்'' என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.அதிமுகவுக்குள் நடப்பது தான் நாடகம்' என்றார்.