சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், கரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று (10.6.2020) காலமானார். அவரது மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது தி.மு.க.! தமிழகம் முழுவதும் தி.மு.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகிறது; தி.மு.க. கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி யாருக்குக் கிடைக்கும் என தி.மு.கவில் விவாதங்கள் தொடங்கியிருக்கிறது. தி.மு.கவை பொறுத்தவரை, அதன் கட்சி கட்டமைப்பில் மாவட்டச் செயலாளர் பதவிதான் வலைமை மிக்கது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்கிற பதவிகளைவிட வலிமயானது மா.செ.பதவி. அந்த வகையில், மா.செ. பதவியைக் கைப்பற்ற பலரும் குறி வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும் தலைமை நிலைய செயலாளருமான கு.க.செல்வம், அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகன், மாணவரணியின் மாநில துணைச் செயலாளர் மோகன், அண்ணாநகர் பகுதி செயலாளர் பரமசிவம், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் மதன் உள்ளிட்டவர்களிடையே போட்டி அதிகரித்திருப்பதாகச் சொல்லும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.கவினர், ’’எம்.எல்.ஏ. கு.க.செல்வம், எம்.எல்.ஏ.மோகன் இருவரும் சீனியர் சிட்டிசன் கேட்டகிரியில் இருக்கிறார்கள். அதனால் அவர்களில் ஒருவரை பரிசீலிக்க கட்சித் தலைமை தயங்கும். மேலும், எம்.எல்.ஏ. மோகன், தனது மகன் கார்த்திக்கு (சபரீசனுக்கு நெருக்கமானவர்) வருகிற சட்டமன்றத் தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் எம்.எல்.ஏ.சீட் வாங்கித்தர ஏற்கனவே பேசி வைத்திருக்கிறார். அதனால், அவருக்கு மா.செ. வாய்ப்புக் குறைவு.
அண்ணா நகர் பகுதி செயலாளர் பரமசிவத்துக்கும், எம்.எல்.ஏ. மோகனுக்கும் ஏழாம் பொறுத்தம். அதனால் பரமசிவத்துக்கு எதிராக எம்.எல்.ஏ. தரப்பு, காய்களை நகர்த்தக்கூடும். திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் மதனுக்கு, எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான சேகர்பாபு சிபாரிசு செய்வதாகத் தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், மாணவரணிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த முறை மா. செ. பதவி மாணவரணிக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து சிலர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்‘’ என்கிறார்கள். இதற்கிடையே, அன்பழகனின் இழப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற குரல்களும் எதிரொலிக்கின்றன.