![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/fsU0-nP7XshlKN9J2aSSZMI8Jgw6HfJ0dHfTd8W5gfc/1543496628/sites/default/files/inline-images/ops%201_0.jpg)
துணை முதல்வர் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் தற்பொழுது அவருக்காக நற்பணி இயக்கம் ஒன்று திடீரென உருவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியை பொருத்தவரை துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு கோஷ்டியாகவும், அதுபோல் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி ஆதரவாளரான கம்பம் கே. எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டி திடீரென எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் மெகா சைஸ் போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டினார். இப்படி அடித்து ஒட்டப்பட்ட போஸ்டரில் ஓபிஎஸ் படம் இல்லாமல் அடிக்கப்பட்டு இருப்பது கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அந்த போஸ்டர்களையும் அங்கங்கே கிழித்தெறிந்தனர்.
![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/_wDs3oQ2MLOBiVSoc7XLb-stal8jgCBUIoT_Hs0rx1A/1543496644/sites/default/files/inline-images/ops%202.jpg)
அதை தொடர்ந்து பால்பாண்டி தீபாவளிக்காக வாழ்த்து கூறியும் எடப்பாடியார் பேரவை சார்பாக அங்கங்கே வைத்திருந்தார். இப்படி ஒபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்திலையே ஒபிஎஸ்சை ஓரம் கட்டி விட்டு எடப்பாடிக்கு ஆதரவாக பேரவை உருவாகி வருவதை கண்டு கட்சிக்காரர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
இந்த நிலையில் திடீரென தேனி மாவட்டத்தில் "தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் ஓபிஎஸ் ஆதரவாளரான ராஜ்மோகன் போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் ஓபிஎஸ் படம் போலவே எடப்பாடி படத்தையும் பெரிதாக போட்டுள்ளனர். அதோடு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் படத்தையும் போட்டு உள்ளனர்.
![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/KzsiuG3in1tig3nDGXJ-73L4cnjqyVCfmOGVGllhSH0/1543496672/sites/default/files/inline-images/ops%203_0.jpg)
இப்படி ஓபிஎஸ்க்காக திடீரென உருவாக்கப்பட்ட இந்த நற்பணி இயக்கம் தற்பொழுது முதல் கட்டமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே இருக்கும் கல்லாயங்குடி கிராமத்தை தத்தெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அங்கங்கே முகாம் போட்டு முதல்கட்டமாக செய்து வருகிறார்கள்.
இதுபற்றி நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, அம்மாவுக்கு பிறகு அண்ணன் ஒபிஎஸ் தான் அந்த அடிப்படையில் தான் இந்த நற்பணி இயக்கம் உருவாகியுள்ளது. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறோம். தேனி மாவட்டத்தில் உள்ள நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை அண்ணன் ஒபிஎஸ் க்காக உருவாக்கப்பட்ட தாயின் தலை மகனாரின் நற்பணி இயக்கத்தை உருவாக்கி பொது மக்களுக்கும், கட்சிகாரர்களுக்கும் உதவி செய்ய தயாராகி வருகிறோம் என்று கூறினர்.