முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ.பி.எஸ் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''முல்லைப் பெரியாறு அணையில் 152 அடியாக நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை ஜெயலலிதா பெற்றுத்தந்தார், அதன் தொடர்ச்சியாக அந்த வருடமே 142 அடியாக முல்லைப் பெரியாறு நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று தடவை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக நிலைநிறுத்தப்பட்ட வரலாறு ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறின் ஜீவாதார உரிமையாக 5 மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகப் பெரிய ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அணையைக் கட்டிய பென்னி குயிக்குக்கு நினைவு மண்டபத்தையும், முழு உருவ வெண்கலச் சிலையும் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்தார். இந்த ஐந்து மாவட்ட விவசாய பெருங்குடி மக்களும் இதற்காக மிகப்பெரிய நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தை ஜெயலலிதாவிற்காக நடத்தினர்.
ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி இருக்கிறது. இன்று பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 142 அடியைத் தேக்க பல்வேறு இடையூறுகளை கேரளாவில் இருக்கின்ற அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கண்டும் காணாமல் தமிழக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தமிழக மக்களுக்கு நினைவூட்டுகிறோம். ஐந்து மாவட்ட வேளாண் குடிமக்களுக்கு ஜீவாதார உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை ஐந்து மாவட்டங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நானும் கலந்து பேசி அதற்குரிய தேதியை இன்று மாலை அறிவிப்போம். இந்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அமையும்'' என்றார்.
அதன்பிறகு செய்தியாளர் ஒருவர் அதிமுகவில் ஒற்றை தலைமைதான்... எனக் கேள்வியைத் தொடங்க, ''போப்பா.. போப்பா... போ... போ...'' என்று செய்தியாளர்கள் அனைவரையும் விலக்கி விட்டுச் சென்றார். அருகே முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.