தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அக்கட்சியையும் அதன் முக்கிய தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பலமுறை தாக்கிப் பேசியுள்ளார். அதற்கு செந்தில் பாலாஜியும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் மின்வாரியத்தில் அதிக அளவில் ஊழல் நடப்பதாகவும், நான்கு மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சி செய்வதாகவும், அது தொடர்பான ஆவணங்களை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது மட்டுமின்றி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியிடத் தயார் என்று கூறிவரும் அண்ணாமலையிடம் “அதை வெளியிட்டால் நல்லது. ஊழல் செய்தவர்கள் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்” என தமிழக அமைச்சர்கள் கூறுவதும், அதன்பின் அண்ணாமலை மௌனம் காப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் ரூபாய் 3.5 லட்சம் என்று பேச்சு எழுந்தது. இதற்கு கோவையில் செய்தியாளர்களிடம் பதில் அளித்த அண்ணாமலை, “ரபேல் விமான பாகங்களை கொண்டு இந்த வாட்ச் செய்யப்பட்டது. இது நான் உயிரோடு இருக்கும் வரை என்னுடன் தான் இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, “பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்சை, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.
அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?
வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு என்றும், மேக் இன் இந்தியா என்றும் பேசி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதும் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புமான ரபேல் போர்விமானத்தின் உதிரி பாகங்களால் செய்த ரபேல் வாட்ச் வைத்திருக்கும் அண்ணாமலை, அது தொடர்பான கேள்வியின் போது நான் தேசியவாதி எனக் குறிப்பிட்டிருந்தார். இணையத்தில் பலரும் இதுதான் தேசியவாதமா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.